350 விலை மதிப்பில்லாத பொருள்கள்; 40 ஆண்டுகளுக்கு பிறகு சரிபார்ப்பு!- ராமேஸ்வரம் கோயிலில் 30 பேருக்கு நோட்டீஸ்

0 5468
ராமேஸ்வரம் கோயில்

சுமார் 1500 ஆண்டுகளள் பழமையான ராமேஸ்வரம் கோயிலுக்கு சொந்தமாக தங்கம், வெள்ளி, வைரம், வைடூரியம், பவளம்,செம்பு ஆகிய உலோகங்களால் செய்யப்பட்ட 350- க்கும் மேற்பட்ட விலைமதிப்பில்லாத அணிகலங்கள் உள்ளன. இந்த அணிகலங்கள் அனைத்தும் கோயி லின் இரண்டாம் பிரகாரத்தில் உள்ள கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. ஆண்டுதோறும் நடைபெறும் மாசி சிவராத்திரி, ஆடி திருக்கல்யாணம், நவராத்திரி விழா உள்ளிட்ட திருவிழா காலங்கள் மற்றும் சுவாமி அம்பாள் வீதி உலா, தினசரி பள்ளியறை, ஆறுகால பூஜைகளின் போது இந்த ஆபரணங்கள் அலங்காரத்துக்கு பயன்படுத்தப்படும்.

கருவுவூலத்திலிருந்து கோயில் இணை ஆணையர் முன்னிலையில் ஊழியர்கள் மற்றும் குருக்கள்களிடம் கொடுத்து சுவாமிக்கு சாத்தப்பட்டு பிறகு பாதுகாப்பாக மீண்டும் கருவூலத்திலேயே வைக்கப்படும். இந்த நிலையில் , ராமேஸ்வரம் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆண்டு அனைத்து அணிகலங்கலும்; சரிபார்த்து நகை மதிப்பீட்டாளர்கள் மூலம் மறு மதிப்பீடு செய்யும் பணி நடைபெற்றது. சாமிக்கு அணிவிக்கப்படும் தங்கம், வெள்ளி, வைரம், பவளம் உள்ளிட்ட அனைத்து வகையான ஆபரணங்களும் ஆய்வு செய்யப்பட்டன. திருவிழா காலங்களில் சுவாமி , அம்பாள் பவனி வரும் தங்கம் வெள்ளியால் செய்யப்பட்ட தேர்கள், பல்லக்குகள் உள்ளிட்டவையும் எடை சரி பார்க்கப்பட்டன.image

சரிபார்க்கம் பணியின் போது கோயிலில் சாமிக்கு அணிவிக்கப்படும் பல நகைகளில் அதன் எடை குறைந்ததிருந்ததாக சொல்லப்படுகிறது. இது குறித்து கோயில் பணியாளர்கள்,குருக்கள், ஓய்வு பெற்ற குருக்கள் உள்ளிட்ட 30 பேருக்கு கோயில் நிர்வாகத்திடமிருந்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருக்கிறது. விளக்கம் தரவில்லையெனில் இழப்பீட்டு மதிப்பீட்டுத்தொகை வசூல் செய்யப்படும் என்றும் துறைரீதியான நடவடிக்கை மேற் கொள்ளப்படும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. இதனால் கோவில் பணியாளர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

இது குறித்து ராமேஸ்வரம் கோயிலு இணை ஆணையர் கல்யாணியை தொடர்பு கொணடு கேட்ட போது, '' தமிழ்நாடு முழுவதும் இந்து அற நிலையத்துறைக்கு சொந்தமான கோயில்களில் தங்கம் ,வெள்ளி, செம்பு உள்ளிட்ட பொருள்களின் மதிப்பீடு நடைபெற்று வருகிறது. ராமேஸ்வரம் கோயிலில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு நகை மதிப்பீடு செய்யப்பட்டது. அதன் அறிக்கைதான் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தட்டு,கும்பாலம், மணி , சர விளக்குகள், ஊஞ்சல்,தேர் உள்ளிட்ட வெள்ளியால் செய்யப்பட்ட பொருள்கள் மற்றும் தங்க கவசம்,கிரிடம், தேர், அலங்கார பொருள்கள், தங்கம் வெள்ளியால் ஆன சாமி அம்பாள் வீதி உலா வரும் வாகனங்கள், சாமி ஆராதனை செய்யப்படும் தங்கத்தினாலான பொருள்களின் எடை குறைவாக உள்ளன என்பது தெரியவந்தது.

எடை குறைவுக்காக முறையான காரணம் குறித்து கோவில் நிர்வாகம் தகுந்த விளக்கம் அளிக்கும் படி மதிப்பீட்டாளர்கள் குழு உத்தரவிட்டுள்ள தாகவும், அதற்கு கோவில் நிர்வாகம் சார்பில் குருக்களிடம் தகுந்த காரணத்தை நிர்வாகத்திற்கு எழுத்து ப்பூர்வமாக விளக்கம் அளிக்குமாறு அறிவுறுத்தியுள்ளோம் . தங்கம் மற்றும் வெள்ளி பொருள்கள் மதிப்பீடு செய்யப்பட்டு 40 வருடங்களுக்கு பின் தற்போது நடைபெற்றுள்ளது. பெரும்பாலான குருக்கள் மற்றும் ஊழியர்கள் பணி ஓய்வு பெற்றுள்ளனர். புதிய அலுவலர்கள் குருக்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.பொதுவாகவே பயன்பாட்டில் இருக்கும் பொருட்கள் சேதம் அடைவதும், தேய்மானம் அடைவதும் இயல்புதான். ஆகவே முறையான விளக்கம் வந்தவுடன் மதிப்பீட்டுக் குழுவுக்கு அனுப்பி வைப்பது நடைமுறை'' என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments