அதிக கட்டணம் வசூலா ...அறக்கட்டளைக்குள் மோதலா? - கிங்ஸ் பள்ளி குறித்து லண்டனிலிருந்து புகார்

0 3961

சென்னையில் அறக்கட்டளை சார்பில் செயல்படும் கிங்ஸ் பள்ளியில் மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூல் செய்யப்படுவதாக லண்டனில் இருந்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு ஆன்லைன் மூலம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

சென்னை வில்லிவாக்கத்தில் கிங்ஸ் மெட்ரிகுலேசன் என்ற பள்ளி செயல்பட்டு வருகிறது. கிங்ஸ் அறக்கட்டளையின் கீழ் இந்த பள்ளி இயங்கி வருகிறது. அறக்கட்டளையின் முன்னாள் செயலாளர் பிரேம்குமார் என்பவர் லண்டனிலிருந்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு ஆன்லைன் மூலம் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது, '' கடந்த 1992-ஆம் ஆண்டிலிருந்து கிங்ஸ் அறக்கட்டளை செயல்பட்டு வருவகிறது. இதன் நிறுவனர் எனது தந்தை பெருமாள், செயலாளராக நானும் பொருளாளராக எனது சகோதரன் பிரவீன் குமாரும் செயல்பட்டு வந்தோம். அறக்கட்டளையின் கீழ் செயல்படும் கிங்ஸ் மெட்ரிக்குலேஷன் பள்ளியை, எனது தாய் பேபி பெருமாள் 2018 - ஆம் ஆண்டு வரை நடத்தி வந்ததார். உடல்நிலை சரியில்லாமல் தாய் இறந்து விட்டார். நான் லண்டனில் நுண்ணுயிரியல் விஞ்ஞானியாக பணிபுரிந்து வருவதால் , தாயார் இறந்த பிறகு, எனது தந்தை மற்றும் சகோதரர் பிரவீன்குமார் இந்த அறக்கட்டளையை நடத்தி வந்தனர். இந்தப் பள்ளியில் எனது சகோதரன் பிரவீன் குமாரின் மனைவி நித்தியா முதல்வராக செயல்பட்டு வருகிறார். ஏழை மாணவர்களிடத்தில் 50 சதவிகித கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டுமென்ற நோக்கத்தில் எங்கள் அறக்கட்டளை தொடங்கப்பட்டது. ஆனால், எனது சகோதரனும் அவரின் மனைவியும் அறக்கட்டளையை சீரழித்து வருகின்றனர். குறிப்பாக 50 சதவீதம் கட்டணம் மட்டுமே வசூலித்து வந்த மாணவர்களிடத்தில் மீதியுள்ள 50 சதவீத கட்டணத்தை தனியாக வங்கி கணக்கில் செலுத்துமாறு பெற்றோர்களை வற்புறுத்துவதாக பிரவீன்குமார் மீது என்னிடத்தில் புகார்கள் வருவதாக தெரிவித்துள்ளார். இதனால் ஒரு மாணவன் தற்கொலை செய்து கொண்டுள்ளான். தகுதியில்லாத ஆசிரியர்களை சேர்த்து அறக்கட்டளையின் பெயரை கெடுக்கின்றனர். மேலும் என்னை ஒதுக்கி விட்டு, அறக்கட்டளை சொத்துக்களை அபகரிக்க திட்டமிட்டுள்ளனர் என்று சகோதரன் பிரவீன்குமார், தந்தை பெருமாள் ஆகியோர் மீது புகார் அளித்துள்ளார்.image

பிரேம்குமார் மற்றும் பிரவீன்குமார் 

இது தொடர்பாக சகோதரர் பிரவீன்குமாரிடம் விளக்கம் கேட்ட போது அவர் கூறியதாவது, சொத்து பிரச்சனை தொடர்பாக சகோதரர் பிரேம் குமார் மற்றும் அவரது மனைவி திட்டமிட்டு பொய் புகார் அளித்துள்ளனர். கடந்த 2011 - ஆம் ஆண்டிலேயே இங்கிலாந்தில் பிரேம் குமார் குடும்பத்தோடு குடியேறிவிட்டார். விதிப்படி 6 மாதத்துக்கு மேல் அறக்கட்டளை உறுப்பினர் வெளிநாட்டில் இருந்தால் அவர்களை நீக்கும் உரிமை அறக்கட்டளை நிர்வாகிகளுக்கு உள்ளது . அதனடிப்படையில் 2 ஆண்டுகளுக்கு முன் அறக்கட்டளையின் நிறுவனரான எனது தந்தை பெருமாள் பிரேம்குமாரை நீக்கினார். பள்ளி கட்டணம் தொடர்பாக சகோதரர் பிரேம்குமார் முன் வைக்கும் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றது . மேலும் சகோதரர் பிரேம் குமார் கூறிய படி , மாணவர் யாரும் தற்கொலை செய்துகொள்ளவில்லை. என் சகோதரர் வங்கி கணக்கை சோதனை செய்தால் , போலி நிறுவனம் நடத்தியது தெரிய வரும். பள்ளியை மூடி சொத்துக்களை அபகரித்த பிரேம்குமார் அவரின் மனைவி சாருலதா ஆகியோர் நாடகமாடுகின்றனர். இது தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளேன்'' என்கிறார்.

சொத்து பிரச்சனையா அல்லது பள்ளியில் அதிகம் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments