தவணை தேதியில் பணமிருந்தாலும் எடுப்பதில்லை... அபராதத்துடன் பணம் வசூல்! கொரோனா காலத்திலும் நிதி நிறுவனம் கோரத்தாண்டவம்
தவணை தேதியில் வங்கிக்கணக்கில் பணம் இருந்தாலும், பணம் எடுக்காமல் மறுநாள் எடுத்து, அபராதத் தொகை வசூலிப்பதாகக் கூறி பஜாஜ் நிதி நிறுவனத்தை வாடிக்கையாளர்கள் முற்றுகையிட்டனர்.
இரு சக்கர வாகனம், ஃபர்னிச்சர் , மின்சாதனப் பொருட்கள் வாங்க என நடுத்தர வர்க்கத்தினருக்கு பஜாஜ் நிறுவனம் மாதத் தவணையில் கடன்களை வழங்குகிறது .பெரியளவிலான நிதிச்சுமையின்றி மாத ஊதியத்தின் வழியாக இந்த கடன்களை குறிப்பிட்ட காலத்தில் செலுத்திவிட முடியும் என்ற நம்பிக்கையில் பலரும் நிதி நிறுவனங்களில் கடன் வாங்குகின்றனர்.
இந்த நிலையில், பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் கடந்த 4 மாதங்களாக கடன்தாரர்களை திட்டமிட்டு அபராதத் தொகை வசூலிப்பதற்காக புதிய யுக்தியை கையாண்டு வருவதாக வாடிக்கையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அதாவது, தவணைத் தொகை செலுத்த வேண்டிய தேதியில் வங்கிக் கணக்கில் போதுமான பணம் இருந்தாலும் எடுக்காமல் மறுநாள் எடுப்பதாக வாடிக்கையாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
உதாரணமாக , பர்னிச்சர் பொருள் ஒன்றுக்காக ரூ.12,000 பெற்ற கடன்தாரரின் கணக்கில் தவணை நாளான 2 - ம் தேதி 1046 ரூபாய் இருந்த நிலையில் மறுநாளில் தவணைத் தொகை ரூ.1000 எடுக்கப்பட்டுள்ளது. மேலும் , தாமத கட்டணம் என்ற பெயரில் அதே மாதத்தின் மற்றோரு நாளில் ரூ. 450 எடுத்துக் கொள்வதாக வாடிக்கையாளர்கள் குமுறுகின்றனர்.
இதையடுத்து, பொறுத்துப் பொறுத்து பார்த்த கடன் வாங்கிய மக்கள் பஜாஜ் சேவை மையத்தில் முற்றுகையிட்டு, வாக்குவாதத்தில் ஈடுபடத் தொடங்கினர். காவல்துறை அதிகாரிகள் வாடிக்கையாளர்களிடம் சமரசம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறிய பிறகு வாடிக்கையாளர்கள் கலைந்து சென்றனர்.
இது குறித்து பஜாஜ் நிறுவன அதிகாரிகளிடம் கேட்டபோது, நிர்வாக ரீதியாக எதையும் தாங்கள் கூற முடியாது எனவும் , நிறுவனத்தின் மேலிடத்தில்தான் இதுபற்றிக் கேட்க முடியும் என்று தெரிவித்துள்ளனர்.
கொரோனா ஊரடங்கால் அடிப்படை செலவுகளுக்கே பலரும் அல்லல்படும் நிலைல், தனியார் நிதி நிறுவனங்கள் வரம்பு மீறிச் செயல்படுவது மனசாட்சியற்ற செயல் என்று வாடிக்கையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
Comments