வேகத்தடுப்பால் விபத்துக்களை ஏற்படுத்துவது எப்படி ? போலீசார் விஷப்பரீட்சை

0 4927
வேகத்தடுப்பால் விபத்துக்களை ஏற்படுத்துவது எப்படி ? போலீசார் விஷப்பரீட்சை

பரமக்குடி அருகே மதுரை ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் சாலையில் தேவையின்றி வைக்கப்பட்டிருந்த வேகத்தடுப்பு கம்பிகளால் அதிவேகத்தில் வந்த வேனும் காரும் மோதி விபத்துக்குள்ளானது. காவல்துறையினரின் விபரீத வேகத்தடுப்பு முறையால் தொடரும் விபத்துக்கள் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்துவதற்காக ஒவ்வொரு ஊருக்கு அருகிலும் சாலையில் இரும்பு கம்பிகளால் தடுப்புகள் போடப்பட்டுள்ளன.

மையத் தடுப்புச் சுவர் இல்லாத ஒருவழிச்சாலைகளில் சம்பந்தம் இல்லாத இடங்களில் போடப்பட்டுள்ள வேகத் தடுப்புக் கம்பிகளே விபத்துக்களை உருவாக்கும் பகுதிகளாக மாறிவருகின்றது.

சில தினங்களுக்கு முன்பு புதுச்சேரி அடுத்த வில்லியனூர் பத்துக்கண்ணு சாலை பகுதியில் வைக்கப்பட்டிருந்த வேகத்தடுப்பு கம்பியால் கார் மற்றும் லோடு வேன் மோதிக் கொண்டது.

செவ்வாய்கிழமை ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள அரிய நேந்தல் கிராமத்தில் மதுரை ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் வேகத்தடுப்பு கம்பியால் மற்றொரு சாலை விபத்து நிகழ்ந்துள்ளது

தங்கச்சிமடத்தில் இருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்த கார் ஒன்று சாலையில் முறையின்றி அமைக்கப்படிருந்த வேகத்தடுப்பு கம்பிகளுக்கு இடையே வேகமாக புகுந்து வெளியேறிச் சென்ற நிலையில், வேகத்தடுப்பு கம்பியை நோக்கி வந்த வேன் ஒன்று வேகத்தை கட்டுப்படுத்த இயலாமல் கார் மீது பயங்கரமாக மோதியது.

வேனில் பயணித்தவர்கள் சேலத்தில் இருந்து கீழக்கரையில் உள்ள திருமண வீட்டிற்கு உறவினர்களுடன் செய்துகொண்டிருந்தனர். வேன் மோதிய வேகத்தில் டட்சன் கார் பொம்மை கார் போல சுழன்று சாலையோரம் தண்ணீர் சுமந்து வந்த பெண் ஒருவரை தட்டிவிட்டு சாலையோரம் போய் நின்றது.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த மூவர் வேனில் பயணம் செய்த ஒருவர் உள்ளிட்ட 4 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் கடப்பாறையால் உடைத்து மீட்கப்பட்டனர்.

பலத்த காயம் அடைந்த 7 பேர் உள்ளிட்ட 12 பேர் சிகிச்சைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் வளைவில் திரும்பிய வேண் ஓட்டுனர் அதிவேகத்தில் வந்ததே விபத்திற்கு காரணமாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஆனால், வளைவில் திரும்பியதும் சாலை தடுப்பு கம்பியை கண்டு மிரண்டதாகவும், கண்ணிமைக்கும் நேரத்திற்குள்ளாக அந்த கம்பிகளுக்கு இடையே புகுந்து வந்த கார் , வேனை நெருங்கி வந்துவிட்டதால் விபத்து ஏற்பட்டுவிட்டதாக வேன் ஓட்டுனர் கூறியுள்ளார்.

முழுக்க முழுக்க இந்த விபத்திற்கு சம்பந்தமில்லாத இடத்தில் காவல்துறையினர் அமைத்த வேகத்தடுப்பு கம்பிகள் தான் காரணம் என்று சுட்டிக்காட்டும் வாகன ஓட்டிகள், வேகத்தை குறைப்பதற்காக அமைக்கப்பட்டிருந்தால் அந்த தடுப்பு கம்பிகள் அருகருகே எஸ் வடிவில் வாகனங்கள் நிதானமாக கடந்து செல்லும் வகையில் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்,

அதை விடுத்து வந்த வேகத்திலேயே வாகனங்கள் உள்ளே நுழைந்து செல்லும் வகையில் பெரிய இடைவெளிவிட்டு வைத்திருப்பதால் வளைவில் இருந்து வரும் வாகனங்கள் எளிதாக விபத்தில் சிக்கும் விபரீதம் அரங்கேறுவதாக சுட்டிக்காட்டுகின்றனர்.

தேவையில்லாத இடங்களில் வைக்கப்பட்டுள்ள சாலை தடுப்பு கம்பிகளை அகற்றாவிட்டால் வேகத்தை குறைப்பதற்கு பதிலாக விபத்துக்களை அதிகப்படுத்தி விடும் என்பதே வாகன ஓட்டிகளின் அதங்கமாக உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments