ரம்மியை நம்பி நடுத்தெருவுக்கு வந்தோர் சங்கம்..! தற்கொலைக்கு தீர்வு என்ன?

0 4614

ஆன்லைன்னில் ரம்மி விளையாடினால் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று ஆசைப்பட்டு லட்சங்களை பறிக்கொடுத்து விட்டு இதுவரை 13 பேர் தங்கள் உயிரைமாய்த்துக் கொண்டுள்ள நிலையில் தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டமான ரம்மிக்கு தடை விதிக்கப்படுமா ? என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் ஏற்பட்டுள்ளது.

ரம்மி விளையாடத்தெரிந்தால் தான் அழகான பொண்ணு திருமணத்துகே சம்மதிக்குமாம்..!

ரம்மி விளையாடினால் அழகிகள் எல்லாம் சுற்றிக் கொண்டாடுவார்களாம்..!

ரம்மி விளையாட தெரிஞ்சா யார் பொண்ண இழுத்துட்டு ஓடுனாலும் ஆபத்து வராதாம்..!

இதெல்லாம் ஆசையை தூண்டும் சயனைடு ரம்மியின் கவர்ச்சிகரமான விளம்பரங்கள்..!

இந்த விளம்பரத்தை நம்பி , உண்மையில் ரம்மி விளையாண்ட மதுரை தொழில் அதிபர் ஒருவர் லட்சக்கணக்கில் பணம் இழந்து தாயுடன் தற்கொலை செய்து கொண்டார். கோவையில் மட்டும் இதுவரை 4 பேர் லட்சக்கணக்கில் பணத்தை பறி கொடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர்.

தொண்டாமுத்தூர் பார்பர் காலனியைச் சேர்ந்த ஜீவானந்தத்துக்கு திருமணமாகி ஐந்து வயது மகன் இருக்கும் நிலையில் தொழில் பங்குதாரர்களுக்கு கொடுக்க வைத்திருந்த 20 ஆயிரம் ரூபாயை வைத்து ஆன்லைனில் ரம்மி விளையாடி மொத்தமாக இழந்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விபரீதம் அரங்கேறி இருக்கின்றது.

மாச்சாம்பாளையம் பகுதியில் திருமணமாகாமல் தனிமையில் வசித்து வந்த ஜெயசந்திரன் என்ற இளைஞர் பொழுதுபோக்கிற்காக ஆன்லைன் ரம்மி விளையாடி அடிமையாகி உள்ளார்.

விட்டத்தை பிடிப்பதாக நினைத்து ஆதார், பேன் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை கொடுத்து ஆன்லைன் மூலம் கடன் வாங்கி ரம்மி விளையாடும் நிலைக்கு தள்ளப்பட்ட ஜெயசந்திரன் பணத்தை இழந்து, வருமானத்துக்கும் மேல் கடன் நெருக்கடி ஏற்பட்டதால் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இந்த ஆன்லைன் ரம்மி மூலம் ஆண்டுக்கு 24 ஆயிரம் கோடி ரூபாயை வாரிச்சுருட்டுகின்றது. திறமைக்கான விளையாட்டு என்ற போர்வையில் நடக்கின்ற இந்த சூதாட்டத்தால் ரம்மி செயலிகளின் உரிமையாளர்கள் கோடிகளை வாரிக்குவித்து வருகின்றனர்.

இதில் இழந்ததை பிடிக்கப்போவதாக விழுந்தவர்கள் வாழ்கையை தொலைத்து வீதியில் திக்கற்று நிற்கிறார்கள் தமிழகத்தில் மட்டும் இதனால் இதுவரை 13 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ரம்மி விளையாடுவதை தவிர்த்தால் தற்கொலை எண்ணம் வராது என்னும் நிலை ஏற்பட்டுள்ளது.

போட்டியின் முடிவை முன் கூட்டியே உறுதி செய்து தங்களுக்கு சாதகமாக ரம்மி நிறுவனங்களால் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஆன்லைனில் சிறிய தொகை கட்டினால் ஒரு சில முறைகள் திரும்ப கிடைக்கலாம், அதுவும் விளையாடுபவரின் ஆசையை தூண்டுவதற்கு மட்டுமே, அதிக தொகையை பந்தயம் கட்டி ரம்மி விளையாண்டால் நிச்சயம் பணம் பறிபோகவே செய்யும் என்பதை சுட்டிக்காட்டும் சைபர் குற்றப்பிரிவு காவல்துறையினர், சின்ன மீனை போட்டு பெரிய மீனை பிடிக்கும் தந்திரமான, இந்த சூதாட்டத்தை தடை செய்ய அரசுக்கு ஏற்கனவே பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் தெலங்கானாவில் மக்கள் நலன் கருதி ஆன்லைன் சூதாட்டமான ரம்மிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் தடை விதிக்க உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். இந்த விபரீத தற்கொலைகள் தொடர்வதால் இதனை தடுக்க தமிழக அரசு 10 நாட்களில் ஒரு முடிவை அறிவிக்க இருப்பதாக நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

பணப்பேராசை பிடித்து இந்த சூதாட்டத்திற்கு விளம்பரம் செய்யும் கிரிக்கெட் வீரர்கள் வீராட்கோலி, கங்குலி, நடிகர்கள் பிரகாஷ் ராஜ், பாகுபலி வில்லன் ரானா , தமன்னா என அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் பலரது குடும்பங்களை காவுவாங்கிய லாட்டரியை தடை செய்தது மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதா அவரது வழியில் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments