அமெரிக்க அதிபர் தேர்தலில் வெல்லப் போவது யார்? விறுவிறுப்பாக நடைபெறும் வாக்குப்பதிவு

0 4796
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெல்லப் போவது யார்? விறுவிறுப்பாக நடைபெறும் வாக்குப்பதிவு

அமெரிக்காவின் 45 வது அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில், குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பைடனும் போட்டியிடுகின்றனர். தேர்தல் தினத்திற்கு முன்பே சுமார் 9.5 கோடி வாக்குகள் தபால் மூலம் பதிவான நிலையில், மேலும் 6 கோடி வாக்குகள் பதிவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்கா-கனடா எல்லையில் நியு ஹாம்சையரில் இருக்கும் டிக்ஸ்வில்லி நோட்ச் கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வழக்கமான முறைப்படி நள்ளிரவில் முதலாவதாக வாக்குப்பதிவானது. அங்கு 5 வாக்குகள் பதிவான நிலையில் உடனடியாக அவை எண்ணப்பட்டன. இதில் 5 வாக்குகளுமே, ஜோ பிடனுக்கு கிடைத்தது.

நியூயார்க், நியூஜெர்சி, விர்ஜினியாவில் அதிகாலையிலேயே வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. மக்கள் ஆர்வமுடன் வரிசையில் காத்திருந்து வாக்குகளைப் பதிவு செய்தனர்.

கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் காரணமாக, பெரும்பாலான வாக்காளர்கள் வாக்குச்சாவடி மையங்களுக்கு செல்வதை தவிர்த்து, தபால் மூலம் வாக்களிக்க முடிவு செய்துள்ளனர். தபால் வாக்குகளை பிரித்து எண்ணுவதற்கும் நேரம் எடுக்கும் என்பதால், இந்த முறை தேர்தல் முடிவு வெளியாவதில் தாமதம் ஏற்படும் என கூறப்படுகிறது.

அமெரிக்காவில் உள்ள 50 மாநிலங்களில் புளோரிடா, பென்சில்வேனியா, ஒகியோ, மிச்சிகன், விஸ்கான்சின், அரிசோனா ஆகிய மாநிலங்களில் தேர்தல் முடிவு இழுபறியாக இருக்கும் என கணிக்கப்படுகிறது.

தேர்தலையொட்டி வன்முறை ஏற்படுவதை தடுக்கும் விதத்தில் வெள்ளை மாளிகை உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் ஜோ பைடனுக்கு சாதகமாக இருந்த போதிலும், டிரம்பை அவர் வீழ்த்துவாரா என்பது இந்திய நேரப்படி புதன்கிழமை காலைக்குப் பிறகே தெரியவரும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments