மது போதையில் தகராறு ; திருச்சி சிவா மகன் மீது வழக்குப்பதிவு!
நட்சத்திர ஓட்டலில் மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட திமுக எம்.பி திருச்சி சிவாவின் மகன் மீது தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீராம். பஜாஜ் நிறுவனத்தின் மண்டல தலைமை அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு அண்ணாசாலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் மது குடித்துவிட்டு வெளியே வந்துள்ளார். இந்த சமயத்தில் அங்கு குடிபோதையில் வந்த திமுக எம்.பி திருச்சி சிவாவின் மகன் சூர்யா, ஸ்ரீராமை பார்த்து 4 பீர் வாங்கி வரும்படி கூறியுள்ளார். அப்போது , ஏற்பட்ட வாக்குவாதத்தில் பீர் பாட்டிலால் ஸ்ரீராமின் மண்டையில் சூர்யா அடிக்க முயன்றதாக தெரிகிறது. கொலை மிரட்டல் விடுத்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனால், அதிர்ச்சியடைந்த ஸ்ரீராம் இந்த சம்பவம் தொடர்பாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் சூர்யா மீது புகார் கொடுத்தார்.
இதையடுத்து, சூர்யாவும் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதில், "நட்சத்திர ஓட்டலில் நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டேன். பிறகு , கார் பார்க்கிங்கில் நின்றுகொண்டு பீர் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது , அங்கு வந்த ஸ்ரீராம், என் நண்பரின் கையில் இருந்த பீர் பாட்டிலை பிடுங்கி குடித்தார். எதிர்ப்பு தெரிவித்த நான் "ஏன் இப்படி செய்கிறாய்" என்று கேட்டேன். அதற்கு ஸ்ரீராம் என்னிடத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பிறகு, தன் காரில் இருந்த கத்தியை எடுத்து என்னை குத்த வந்தார். இதற்கு, அங்கு பணியில் இருந்த செக்யூரிட்டி மேனேஜர் கார்த்திக் என்பவரும் உடந்தையாக இருந்தார். பவுன்சர்களை கொண்டு என்னை பிடித்துக் கொண்டு ஸ்ரீராம் தாக்கினார். ஸ்ரீராம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று புகாரில் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீராம், சூர்யா இருவரின் புகார்கள் குறித்தும் தேனாம்பேட்டை போலீசார் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஸ்ரீராம் புகாரில் திருச்சி சிவாவின் மகன் சூர்யா மீது 294(b)- ஆபாசமாக திட்டுதல், 323-காயம் ஏற்படுத்துதல், 506(1)-கொலைமிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதைப்போல சூர்யா கொடுத்த புகாரின் பேரில் ஸ்ரீராம் மீது 294(b)-ஆபாசமாக திட்டுதல், 323-காயம் ஏற்படுத்துதல், 506(2)-கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நட்சத்திர ஓட்டலில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். "ஸ்ரீராமும், சூர்யாவும் நண்பர்களாக இருந்துள்ளனர். இரு தரப்பு புகார்களையும் பெற்று வழக்குப்பதிவு செய்துள்ளோம். யாரும் கைது செய்யப்படவில்லை என்று தேனாம்பேட்டை போலீசார் தெரிவித்துள்ளனர்.
Comments