கடலூருக்கு டிரான்ஸ்ஃபர், ரூம் போட்டு வசூல்! - தங்கக்காசால் வான்டடாக சிக்கிய பத்திரப்பதிவுத்துறை அதிகாரி!
சேலத்தில் பத்திரப்பதிவுத்துறை அதிகாரியின் வீட்டிலிருந்து குவியல் குவியலாக தங்கக்காசுகள் மற்றும் லட்சக்கணக்கில் ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பத்திரப்பதிவுத் துறை மண்டல அலுவலகம் உள்ளது. இங்கு சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களைக் கண்காணிக்க பத்திரப் பதிவுத்துறை துணைத்தலைவராக ஆனந்த் என்பவர் பணியாற்றி வந்தார். இவரது வீடு சேலம் அழகாபுரம் கைலாஷ் நகரில் உள்ளது. இந்த நிலையில், ஆனந்த் கடலூருக்கு டிரான்ஸ்பர் செய்யப்பட்டுள்ளார்.
இதனால், ஆனந்த் 3 நாள் விடுமுறை எடுத்து கொண்டுரியல் எஸ்டேட் அதிபர்கள், புரோக்கர்களிடத்தில் அரசு அதிகாரிகள் என 70 பேரிடம் வசூல் வேட்டையில் ஈடுபட்டுள்ளார். ஏராளமானோர், அவரின் நேர்மையான சேவையைப் பாராட்டி பணத்தை வாரி வழங்கியுள்ளனர். வசூலில் கிடைத்த பணத்தைக் கொண்டு கடந்த வெள்ளிக்கிழமை சேலத்தில் உள்ள நகைக்கடை ஒன்றில் ஒரே நேரத்தில் 34 சவரன் தங்கக்காசுகளை ஆனந்த் வாங்கியுள்ளார். இதற்கிடையே, ஆனந்தின் வசூல் வேட்டை குறித்து சேலம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் மோப்பம் பிடித்தனர்.
இதையடுத்து, ஆனந்தின் வீட்டில் நேற்று சேலம் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீசார் அதிரடி சோதனை செய்தனர். அப்போது, வீட்டிலிருந்து ரொக்கப் பணம் 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மற்றும் 34 சவரன் மதிப்புள்ள தங்கக் காசுககைளை அதிகாரிகள் கைப்பற்றினர். இந்த தங்கக் காசுகளின் மதிப்பு ரூ. 13 லட்சம் ஆகும். சேலம் பத்திரப் பதிவுத்துறை அலுவலகத்திலும் இன்று அதிகாரிகள் சோதனை நடத்தினர். சோதனையில் அனந்ந், சென்னை அண்ணாநகரில் 63 லட்சம் ரூபாய் மதிப்பில் வீடு வாங்கியிருப்பதும் தெரிய வந்தது.
மேலும், குடும்ப உறுப்பினர்கள் பெயரில் வங்கிக் கணக்குகளில் பல லட்சம் ரூபாய் ரொக்கப் பணம், ஏராளமான சொத்து ஆவணங்களும் கண்டுபிடிக்கப்பட்டது . தனக்குக் கீழ் பணி புரியும் ஊழியர்களை இடமாற்றம் செய்து விடுவதாக மிரட்டி ஆனந்த் லட்சக்கணக்கில் பணம் பறித்திருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
டிரான்ஸ்ஃபரை காரணம் காட்டி வசூல் வேட்டையில் , ஈடுபட்ட ஆனந்த் தற்போது வௌ வௌத்து போயிருக்கிறார்.
Comments