தோட்டாவாகப் பயன்படுத்தப்பட்ட விதை... தமிழகத்தில் இப்படியும் ஒரு அதிசய மரம்!
நீர் நிலைகள், அரிய வகை மரங்கள், மூலிகைகள் உள்ளிட்ட இயற்கைச் சூழலைப் பாதுகாப்பது ஒவ்வொரு குடிமகன்களின் கடமையாகும். வளமான வனத்தில் வானுயர்ந்த மரங்களும் உண்டு; அரியவகை பொக்கிஷம் போன்ற மரங்களும் உண்டு. அவற்றை அறிந்து கொள்ளவும் தெரிந்து கொள்ளவும் நமக்கு தான் நேரமுமில்லை; அக்கறையும் இல்லை.
தேனி மாவட்டம், போடி தாலுகாவில் உள்ள ஏல விவசாயிகள் சங்க கல்லூரியில் அரிய வகை மரம் ஒன்று உள்ளது. யாரும் அறிந்திராத, இதுவரை பார்த்திராத இந்த மரத்தின் பெயர் யானைபிடுக்கு மரம் என்பதாகும். இந்த மரத்தின் காய்கள் யானையின் ஆணுறுப்பை போன்று இருப்பதால், தமிழில் யானைபிடுக்கு என்று அழைக்கப்படுகிறது. தமிழகத்தில் ஆங்காங்கே இருந்தாலும், தற்போது அழிந்துவரும் மரங்களின் பட்டியலில் இந்த மரமும் இடம் பெற்றுள்ளது.
இந்த மரம் பிற மரங்களை விட அதிவேகமாக வளரக்கூடியது. ஆலமரம் போன்று பிரமாண்டமாக வளரும். இந்த மரத்தின் விழுதுகளில் சரம் சரமாக பூக்கள் பூத்து ஆலயங்களில் தொங்கும் சரவிளக்கு போல மிகவும் அழகாக காட்சி அளிக்கும். இந்த மரத்தில் விளையும் காயின் பெயர் சுசேஞ். இந்த காய் விஷத்தன்மை கொண்டது. சுசேஞ்சக்காய் தோல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கான மருந்து தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது.
வெள்ளையர்கள் காலத்தில் இந்த காய்களில் கிடைக்கும் விதைகளை துப்பாக்கி தோட்டாக்களாகப் பயன்படுத்தி வந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆங்கிலேயர்கள் காலத்தில் இந்தியாவில் இந்த மரத்தை அதிகளவில் வளர்த்து வந்துள்ளனர். இந்த மரத்தின் காய்கள் 1 முதல் 2 அடி நீளம் வளரக் கூடியது. சுமார், 7 முதல் 10 கிலோ வரை எடையும் கொண்டது. இந்தக் காய்களை துப்பாக்கியை கொண்டு சுட்டாலும் எதிர்திசையில் தோட்டாக்கள் வர முடியாத அளவுக்கு வலிமையான ஓடுகளை கொண்டது.
இந்த மரம் குறித்து தாவரவியல் பேராசிரியர் மோகன் கூறியதாவது, ''ஆப்பிக்காவை தாயகமாகக் கொண்ட Kigelia africana என்கிற தாவரவியல் பெயர் கொண்ட இந்த மரம், ஆலமரம் போல் பரந்து விரிந்து வளர்ந்து அதிக நிழல் தரக்கூடிய குளிர்ச்சியான மரமாகும். இரவில் மட்டுமே பூக்கும் தன்மை கொண்டது. இதனால், மகரந்த சேர்க்கைக்கு வௌவால்கள் மட்டுமே பயன்படுகின்றன. வௌவால்கள் அழிந்து வரும் சூழலில் இந்த மரங்களில் மகரந்தச் சேர்க்கை குறைந்து அழிவின் விளிம்பில் உள்ளன. எனவே, இந்த மரத்தை செயற்கையாக வளர்க்க வேண்டும்'' என்கிறார்.
இந்த மரத்தை சிறுவயதிலிருந்து பார்த்து வரும் போடியை சேர்ந்த முருகன் கூறியதாவது, ''இந்த மரத்தை நான் சிறு வயதிலிருந்து பார்த்து வருகிறேன். 20 வருடத்திலேயே மிகவும் பிரமாண்டமாக அதிக நிழல் தரக்கூடிய மரமாக இது வளர்ந்து விட்டது. சாலையோரங்களில் மற்ற பகுதிகளிலும், இந்த மரங்களை வளர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கோரிக்கை விடுத்தார்.
Comments