ஊழல் அதிகாரிகளுக்குத் தூக்கு...உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து
ஊழல் அதிகாரிகளுக்குத் தூக்குத் தண்டனை வழங்கினால்தான், லஞ்சம் பெறுவதைத் தடுக்க முடியும் என உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
போதுமான நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடுக்கப்பட்ட வழக்கில், நெல் கொள்முதலுக்கு மூட்டைக்கு நாற்பது ரூபாய் லஞ்சம் கேட்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, ஊழியர்கள் மூட்டைக்கு 40 ரூபாய் லஞ்சம் கேட்பதாகக் கூறுவது தவறான தகவல் என்றும், முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் 105 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து 105 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறும்போது, அவர்கள் நெல் கொள்முதலுக்கு லஞ்சம் பெறவில்லை என எப்படிக் கூற முடியும் என நீதிபதிகள் வினவினர். லஞ்ச ஒழிப்புத்துறையினரின் சோதனையில் பல இடங்களில் பணத்தைப் பறிமுதல் செய்துள்ளதை ஊடகச் செய்திகளில் காண முடிந்ததாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
ஊழல் அதிகாரிகளுக்குத் தூக்குத் தண்டனை வழங்கினால் தான் இது போன்ற குற்றங்களைத் தடுக்க முடியும் என்றும் தெரிவித்தனர். அதிரடி சோதனை செய்தவர்கள் யார்? எவ்வளவு தொகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அரசு தரப்பில், நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சிறப்பு அதிரடிக் குழுவினர் எனப் பதிலளிக்கப்பட்டது. மீண்டும் உறுதி செய்து தகவலளிக்கக் கால அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து 105 பேர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை, அவர்களிடம் பறிமுதல் செய்த தொகை ஆகிய விவரங்களுடன் விரிவாகப் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர்.
Comments