லடாக் உரசலைத் தணிக்கும் உறைபனி: கடல் எல்லையை நோக்கி திரும்பும் கவனம்

0 19648

கிழக்கு லடாக்கில் பனிப்பொழிவு தொடங்கி, கடுங்குளிர் ஜீரோ டிகிரிக்கு கீழே சென்றுள்ள நிலையில், இந்திய படைகளின் கவனம் முழுவதும் சீன கடற்படையை எதிர்கொள்வதை நோக்கி திரும்பியுள்ளது.

சீனக் கடற்படையின் அச்சுறுத்தல்களை முறியடிக்க, கடற்படை கிழக்கு பிரிவிற்கும், அந்தமான், நிக்கோபார், லட்சத்தீவுகளுக்கும் முக்கியத்துவம் அளிக்க ராணுவ வியூக வகுப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

கிழக்கு லடாக்கில் பனிப்பொழிவு தொடங்கியுள்ளது. கடுங்குளிர் ஜீரோ டிகிரிக்கும் கீழே சென்றுள்ளதால், அமெரிக்க தயாரிப்பு முகக் கவசங்களின் உதவியுடன் இந்திய ராணுவ வீரர்கள் எல்லையை காத்து நிற்கின்றனர்.

உறைபனி சீசன், தரைவழி எல்லையில் உரசலை தணித்துள்ள நிலையில், ராணுவ வியூகங்களை வகுப்பவர்கள், தங்கள் கவனத்தை கடல் எல்லை நோக்கி குவிக்கத் தொடங்கியுள்ளனர்.

இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய 4 நாடுகளின், நாற்கரப் பாதுகாப்பு கூட்டமைப்பான குவாட் சார்பில், மலபார் கடற்படை கூட்டுப் பயிற்சி அடுத்த செவ்வாய்க்கிழமை தொடங்க உள்ளது.

இந்தியப் பெருங்கடலில் சீனக் கடற்படையின் அச்சுறுத்தல்களை முறியடிக்க கடற்படை கிழக்குப் பிரிவுக்கும், அந்தமான், நிக்கோபார், லட்சத்தீவுகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் வியூகங்கள் வகுக்கப்படுகின்றன.

நிலத்தில் தாக்குதல்களை மேற்கொள்ள நீர்வழியாக உதவும் படைப் பிரிவு போர்ட் பிளேரில் இருந்து செயல்படுகிறது. கப்பல் துறைகள் இல்லாத இடங்களிலும், கடலோரங்களில் தேவைப்படும் இடங்களில் டாங்குகள், வாகனங்கள், படைகளை இறக்கவும், படைகளுக்கு தேவைப்படும் தளவாடங்களை வழங்கவும் ஐஎன்எஸ் ஜலஸ்வா போன்ற கப்பல்களை பயன்படுத்தும் படைப் பிரிவு இது.

எதிர்காலத்தில் தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள, இத்தகைய மேலும் 2 படைப் பிரிவுகளை மேற்கு கடலோரத்திற்கும் கிழக்கு கடலோரத்திற்கும் தனித்தனியே உருவாக்க திட்டமிடப்பட்டு வருகிறது.

இத்தகைய படைப் பிரிவை திருவனந்தபுரத்திலும் விசாகப்பட்டினம் அல்லது அந்தமான்-நிக்கோபார் தீவுகளில் ஏற்படுத்த திட்டமிடப்பட்டு வருகிறது.

மலாக்கா, சுந்தா மற்றும் லம்போக் நீரிணைகள் வழியாகவே, இந்தியப் பெருங்கடலில் இருந்து தென்சீனக் கடலை அணுக முடியும். இந்திய விமானப் படையின் போர் விமானங்கள் பிரம்மோஸ் ஏவுகணைகள் மூலம் மலாக்கா, சுந்தா மற்றும் லம்போக் நீரிணைகளில் செல்லும் எந்த கப்பலையும் தாக்க முடியும். எனவே, அந்தமான்-நிக்கோபார் தீவுகளும், லட்சத் தீவுகளுக்கும் தாக்குதல் மேற்கொள்வதற்கான மையங்களாக மாற உள்ளன.

மேலும் சூயஸ் கால்வாய் மற்றும் பாரசீக வளைகுடாவில் இருந்து மலாக்கா நீரிணை வழியாக தென்கிழக்கு மற்றும் வடக்கு ஆசியா செல்லும் கப்பல்களின் வழித்தடங்களில் இந்த தீவுகள் உள்ளன.

அதிலும் பாரசீக வளைகுடாவில் இருந்து கப்பல்கள் கிழக்கு ஆசியா செல்லும் நேரடி வழித்தடத்தில் லட்சத்தீவுகள் உள்ளன. அந்த வகையில், இந்தியப் பெருங்கடலில் எல்லைத்தீவுகளே, கடற்படை செயல்பாடுகளின் மையமாக உள்ளன.

இந்தியப் பெருங்கடல் மண்டலத்தை மையப்படுத்தி இந்தியா-அமெரிக்கா ஏற்படுத்தியுள்ள கூட்டு, 2018ல் செய்துகொண்ட ஒப்பந்தம் ஆகியவற்றின் மூலம், குவாட் நாற்கர நாடுகள் கண்காணிப்பையும் ராணுவ தகவல் தொடர்பையும் வழங்கும்.

இது இந்திய கடற்படைக்கு மட்டுமல்ல முப்படைகளுக்கும் பலம் சேர்க்கும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments