தாயக மண் மீது கண் வைப்போருக்கு உரிய பதிலடியை கொடுக்கும் சக்தி இந்திய ராணுவத்திற்கு உள்ளது - பிரதமர் மோடி
தாயக மண் மீது கண் வைப்போருக்கு உரிய பதிலடியை கொடுக்கும் சக்தி இந்திய ராணுவத்திற்கு உள்ளது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். நாட்டின் இறையாண்மையையும், எல்லைகளையும் காக்க இந்தியா முழு வீச்சில் தயாராக உள்ளது என்றும் அவர் உறுதிபட தெரிவித்துள்ளார்.
சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த தினத்தை ஒட்டி தேசிய ஒற்றுமை தினம் நாடு முழுவதும் இன்று கடைப்பிடிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு குஜராத்தின் கெவாடியா நகரில் வடிவமைக்கப்பட்டு உள்ள ஒற்றுமைக்கான சிலை மீது பிரதமர் மோடி பால் ஊற்றி, மலர்களை தூவி மரியாதை செலுத்தினார்.
இதனை தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க கலை நிகழ்ச்சிகள், கொண்டாட்டங்கள் ஆகியவை தொடங்கி நடந்தன. பின்பு, பாதுகாப்பு படை வீரர்களின் ராணுவ அணிவகுப்பு நடந்தது. இதனை பிரதமர் மோடி பார்வையிட்டார்.
இதன் பின்னர் பேசிய அவர், நாட்டின் எல்லையை காப்பதில் இந்தியாவின் நிலைப்பாடு இப்போது வெகுவாக மாறி உள்ளது என்றார். நாட்டின் ராணுவ வீரர்கள் இப்போது முழு ஆயுத வலிமையோடு உள்ளனர் என்றும், தாயக மண் மீது தங்களின் தீய பார்வையை வைப்போருக்கு உரிய பதிலடி கொடுக்க வீரர்கள் தயாராக உள்ளனர் என்றும் அவர் கூறினார்.
எல்லை பகுதிக்கான உள்கட்டமைப்பு, தளவாடங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வலிமையாக உள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.
சில நாடுகள் பயங்கரவாதத்திற்கு நேரடியாக ஆதரவு தெரிவிப்பது உலக அமைதிக்கும் பங்கம் விளைவிக்குமென பிரதமர் கூறினார்.
உலகிலுள்ள அனைத்து நாடுகளும் பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றிணைய வேண்டிய தருணமிது என்ற அவர், பயங்கரவாதம் மற்றும் வன்முறை ஆகியவற்றால் ஒருவரும் பலனடைய முடியாது என்றார்.
புல்வாமாவில் நடைபெற்ற தாக்குதலில் வீரர்கள் உயிர் தியாகம் செய்த போது சிலர் அதற்காக வருத்தப்படவில்லை என்றும், இதனை ஒருபோதும் நாடு மறக்காது என்றும் அவர் குறிப்பிட்டார். அந்த நேரத்தில் சிலர் அரசியல் செய்து கொண்டு இருந்தனர் என்றும், இதுபோன்ற அரசியலை செய்ய வேண்டாம் என்று நாட்டின் நலனுக்காக வேண்டி கேட்டு கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.
புல்வாமா தாக்குதலுக்கு யார் காரணம் என்பதை அண்டை நாட்டின் நாடாளுமன்றத்தில் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி பிரதமர், இப்போது உண்மை வெளிப்பட்டுள்ளது என்றார். புல்வாமா சம்பவத்தை வைத்து அரசியல் செய்தவர்களின் உண்மை முகம் இப்போது வெளிப்பட்டு விட்டதாகவும் அவர் கூறினார்.
கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் 130 கோடி இந்தியர்கள் இணைந்து களப்பணியாளர்களை கவுரவித்ததாக அவர் கூறினார்.
இந்த நேரத்தில் நாடு முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு தனது கூட்டு திறனை நிரூபித்துள்ளதாக அவர் தெரிவித்தார். இன்று காஷ்மீர் ஒரு புதிய வளர்ச்சிப் பாதையில் நகர்ந்துள்ளது என்ற பிரதமர், வடகிழக்கில் அமைதி மீட்டெடுக்கப்பட்டுள்ளது என்றார்.
அங்கு வளர்ச்சிக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளாக இருக்கட்டும் எதுவாக இருந்தாலும், இன்று நாடு ஒற்றுமையின் புதிய பரிமாணங்களை எட்டி உள்ளதாக மோடி தெரிவித்தார்.
Comments