தலைபிரசவத்துக்காக காத்திருந்த இளம்பெண் தவறான சிகிச்சையால் குழந்தையுடன் பலி - மருத்துவமனையில் மக்கள் போராட்டம்
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் தலை பிரசாரத்திற்கு வந்த இளம் பெண் தவறான சிகிச்சையால் குழந்தையுடன் இறந்து போனதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கள்ளக்குறிச்சி அருகேயுள்ள பாசார் என்ற கிராமத்தைச் சேர்ந்த அயல்துரை என்பவரின் மனைவி கற்பகம் (வயது 20 ). கற்ப்பகம் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். பிரசவ வலி ஏற்பட்டதால் நேற்று அருகிலுள்ள தியாகதுருகம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்துக்காக கற்பகம் அனுமதிக்கப்பட்டார். ஆனால், பிரசவத்தின் போது குழந்தை இறந்து விட்டது. அதே வேளையில், கற்ப்பகத்துக்கு அதிகப்படியான உதிரப்போக்கு ஏற்பட்டு சுயநினைவை இழந்தார். இதனால், மேல் சிகிச்சைக்காக கற்பகம் கள்ளக்குறிச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். கற்பகத்தின் உயிரை காப்பாற்ற மருத்துவர்கள் அவரின் கர்ப்பப்பையை அகற்றியுள்ளனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி கற்பகம் இறந்து போனார்.
இறந்த கற்பகம் மற்றும் அவரின் குழந்தையின் உடல்கள் கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவமனை உடற்கூறு ஆய்வு கிடங்கில் வைக்கப்பட்டிருந்தது. கற்பகத்தின் உடலை பெற்றுச் செல்ல அவரின் உறவினர்கள் காத்திருந்த நிலையில், அயல்துரைக்கு ஆதரவாக, பாட்டாளி மக்கள் கட்சியினர் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், தாய், குழந்தை உயிரிழப்புக்கு காரணமான மருத்துவர் மற்றும் செவிலியர்கள் மீது வழக்கு பதிவு செய்து, கைது செய்ய வேண்டும். அவர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும். கற்பகத்தின் குடும்பத்துக்கு ரூ. 50 லட்ச ரூபாய் இழப்பீடு தரவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலிலும் ஈடுபட்டனர். கள்ளக்குறிச்சி டிஎஸ்பி இராமநாதன் தலைமயிலான போலீசார் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதையடுத்து சாலைமறியல் கை விடப்பட்டது.
இந்த சம்பவத்தால் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.
Comments