வேண்டுதல்படி வேலை கிடைத்ததால் உயிரை மாய்த்து நேர்த்திக் கடன்...இதயம் கலங்கவைக்கும் இளைஞரின் முடிவு

0 44076
வேண்டுதல்படி வேலை கிடைத்ததால் உயிரை மாய்த்து நேர்த்திக் கடன்...இதயம் கலங்கவைக்கும் இளைஞரின் முடிவு

வேலை கிடைத்தால் உயிரை காணிக்கையாக தருவதாக வேண்டிக்கொண்ட இளைஞர், ரயில் வரும்போது தண்டவாளத்தில் தலைவைத்து நேர்த்திக் கடனை நிறைவேற்றிய சம்பவம் நாகர்கோவில் அருகே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் எள்ளுவிளை பகுதியை சேர்ந்த 32 வயது நவீன், படித்துவிட்டு வேலை கிடைக்காமல் நீண்ட நாட்களாக விரக்தியில் இருந்துள்ளார். ஒருவழியாக வங்கி தேர்வில் தேர்ச்சி பெற்றதை அடுத்து,  மும்பையிலுள்ள பேங்க் ஆப் இந்தியா கிளையில் உதவி மேலாளராக பணி கிடைத்துள்ளது.

கடந்த 15 நாட்களுக்கு முன்பு நவீன் பணியில் சேர்ந்துள்ளார். இந்நிலையில்,  நேற்று அதிகாலை விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்து, அங்கிருந்து நாகர்கோவில் வந்த நவீன், வடசேரி அருகே ரயில் வரும்போது தண்டவாளத்தில் தலை வைத்து படுத்து, உயிரை மாய்த்துக் கொண்டார்.

தற்கொலைக்கு முன்னர் பெற்றோருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், பல காலமாக வேலை இல்லாமல் இருந்ததையும், எவ்வளவோ முயற்சித்தும் வேலை கிடைக்காததையும் குறிப்பிட்டுள்ளார். வேலை கிடைத்தால் தன்னுடைய உயிரையே காணிக்கையாக தருவதாக இறைவனிடம் வேண்டியதாகவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு வேலை கிடைத்ததால் வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு கடவுளிடம் செல்வதாகவும் கடிதத்தில் நவீன் குறிப்பிட்டுள்ளார். வேலை கிடைத்தால் உயிரையே காணிக்கையாகத் தருவதாக வேண்டிக் கொண்டு, வேலை கிடைத்தவுடன் வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக தற்கொலை செய்து கொண்ட இளைஞரின் செயலால் அவரது குடும்பம் சோகத்தில் மூழ்கியுள்ளது.

வேண்டுதலால் வேலை கிடைத்ததாக நினைத்தாலும், இறைவன் வாழ்வதற்கான வழியையே காட்டியுள்ளார் என்று சிந்திக்கத் தவறி விட்ட இளைஞரின் செயல் நிச்சயம் தவறான முன்னுதாரணம் என்பதே இறையடியார்களின் கருத்தாக உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments