வட்டிக்கு வட்டி தள்ளுபடி... பயிர்க் கடன், டிராக்டர் கடனுக்குப் பொருந்தாது - மத்திய அரசு
மத்திய அரசு கடந்த வாரம் அறிவித்த வட்டிக்கு வட்டி தள்ளுபடி பயிர்க்கடன், டிராக்டர் கடன் பெற்றவர்களுக்குப் பொருந்தாது என்று மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.
கொரோனா காலத்தில், வங்கியில் கடன் பெற்றவர்கள் தங்கள் கடனைத் திருப்பிச் செலுத்த மார்ச் மாதத்திலிருந்து ஆகஸ்ட் மாதம் வரை மத்திய அரசு சலுகை அறிவித்திருந்தது. இந்த கால கட்டத்தில் கடன் தவணையைச் செலுத்தாமல் ஒத்திவைத்தவர்களுக்கு வட்டிக்கு வட்டி என்று கூட்டு வட்டி விதிக்கப்பட்டது. இதற்குத் தடை விதிக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் மத்திய அரசு, ‘ரூ.2 கோடிவரை கொரோனா காலத்தில் வங்கியில் கடன் பெற்றவர்களுக்கு வட்டிக்கு வட்டி விதிக்கப்படாது’ என்று தெரிவித்தது. இந்த வட்டிக்கு வட்டி தள்ளுபடி சலுகையில் வீட்டுக் கடன் பெற்றவர்கள், கிரெடிட் கார்டு தவணை செலுத்தியவர்கள், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் பெற்ற கடன், நுகர்வோர் பொருட்கள் வாங்கி தவணை செலுத்துவோர், நுகர்வோர் கடன், கல்விக் கடன், வாகனக் கடன் என்று ரூ.2 கோடி வரை கடன் பெற்றவர்கள் பயன்பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் பயிர்க் கடன், டிராக்டர் கடன் பெற்றவர்களுக்கு வட்டிக்கு வட்டிக் கடன் தள்ளுபடி சலுகை வழங்க முடியாது. வேளாண் கடன் பெற்றவர்கள் மத்திய அரசின் வட்டிச்சலுகை திட்டத்துக்குள் வரமாட்டார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் அறிவிப்பால், விவசாயிகள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
Comments