மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு - தமிழக அரசு அரசாணை வெளியீடு
எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளில், அரசு பள்ளி மாணவர்களுக்கு ஏழரை சதவீத உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் குழு பரிந்துரைப்படி, 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டமசோதா கடந்த செப்டம்பர் மாதம் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்து.
நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவர்கள் சுமார் 300க்கும் மேற்பட்டோர் இதன் மூலம் மருத்துவ படிப்பில் சேர முடியும். மசோதாவுக்கு இதுவரை ஆளுநர் ஒப்புதல் அளிக்காத நிலையில், விரைவில் மருத்துவ கலந்தாய்வு நடைபெற இருப்பதால், ஏழரை சதவீத இடஒதுக்கீடு கிடைக்கும் விதத்தில் 162 வது சட்டப்பிரிவின் கீழ் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமது டுவிட்டர் பக்கத்தில், சமூக நீதி காக்கவும், அரசுப்பள்ளி மாணவர்களின் நலன் கருதியும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தமிழக அரசுப் பள்ளிகளில் பயின்று நீட் தேர்ச்சி பெற்ற ஏழை மாணவ, மாணவிகளின் மருத்துவக் கனவுகளை நிறைவேற்றும் விதமாக 7.5% உள்ஒதுக்கீடு அளிக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதனிடையே 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்க அரசாணை பிறப்பித்திருப்பது வரவேற்கத்தக்கது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். "இந்த அரசாணையை இந்த ஆண்டே அமல்படுத்தும் வகையில், உடனடியாக மருத்துவக் கவுன்சிலிங் தேதிகளை அறிவித்து - மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையைத் தொடங்கிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
Comments