ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் ரூ.118.46கோடி மதிப்பீட்டில், வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு - முதலமைச்சர் தொடங்கி வைத்தார்
சென்னை தலைமை செயலகத்தில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் 118 கோடியே 46 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், சேலம் மாவட்டத்தில் உள்ள 1,10,288 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
மேலும், மாசு கட்டுப்பாடு வாரியம் மூலம் 21 மாவட்டங்களில் 45 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள 25 தொடர் சுற்றுப்புற காற்றுத் தர கண்காணிப்பு நிலையங்களையும் அவர் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
தொடர்ந்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஒருங்கிணைந்த நவீன தீவிர சிகிச்சை மையம், நந்தனத்தில் 73 கோடி ரூபாய் மதிப்பிலான ஒருங்கிணைந்த வணிகவரி மற்றும் பதிவுத்துறை கட்டடம் ஆகியவற்றையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.
தகவல் தொழில்நுட்பவியல் துறைக்கு கீழ் வரும், தமிழ்நாடு மின்னாளுமை ஆணையரகத்தை மக்கள் எளிதில்தொடர்பு கொள்ள "நமது அரசு" என்ற இணையதள பக்கத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.
Comments