சென்னையில் விடிய விடிய பெய்த கன மழை.. சாலைகளில் தேங்கிய வெள்ளம்
சென்னையில் ஒரே இரவில் 12 சென்டிமீட்டர் அளவுக்கு மழை பெய்துள்ளது. மாநகர் மற்றும் புறநகர்ப் பகுதியில் இரவு தொடங்கிய மழை விடிய விடிய நீடித்ததால் சாலைகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன.
வடகிழக்குப் பருவ மழை தொடங்கியதன் அறிகுறியாக, சென்னையில் நேற்று மேகமூட்டமாகவும் சில நேரங்களில் லேசான சாரல் மழையும் பெய்தது. இந்நிலையில், நள்ளிரவில் கனமழை கொட்டித் தீர்த்தது.
இரவில் தொடங்கிய மழை இன்று காலையிலும் நீடித்தது. கனமழை காரணமாக, பால் விநியோகம் செய்வோர், காய்கறி வியாபாரிகள், காலையில் பணிக்கு செல்வோர் கடும் அவதியடைந்தனர். கார்கள், இருசக்கர வாகனங்களில் தண்ணீர் புகுந்ததால் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டன.
இரவில் பல மணி நேரம் நீடித்த மழையால் சாலைகளில் வெள்ளம் தேங்கியிருந்தது. ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், மந்தைவெளி உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் அதிகளவு தேங்கிக் காணப்பட்டது. கடற்கரை சாலை, ராதாகிருஷ்ணன் சாலை போன்ற முக்கிய சாலைகளிலும், சுரங்கப்பாதைகளிலும் தண்ணீர் தேங்கியது. இதனை மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
நுங்கம்பாக்கத்தில் 12 சென்டிமீட்டரும், செங்குன்றத்தில் 13 சென்டிமீட்டரும் மழை பதிவானதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் தேங்கியிருந்த மழைநீரால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர். நீரை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.
மிகவும் குறுகலான பகுதிகளை கொண்டுள்ள திருவல்லிக்கேணியில் இடுப்பளவுக்கு தண்ணீர் தேங்கியது. இருசக்கர வாகனங்களை இயக்க முடியாமல், வாகன ஓட்டிகள் தள்ளிக்கொண்டே சென்றனர்.
ஆர்.கே.நகர் கொருக்குப்பேட்டை நெடுஞ்சாலையில் வெள்ளம் போல் மழைநீர் தேங்கிய நிலையில், வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. தெருக்கள் முழுவதும் மழைநீர் தேங்கி கிடப்பதால் மக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர்.
சென்னை வியாசர்பாடியில் சாலைகள், சுரங்க பாதைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. குளம்போல தண்ணீர் தேங்கியதால் வாகனத்தை இயக்க முடியாமல் வாகன ஓட்டிகள அவதியடைந்தனர்.
திருவான்மியூர் பணிமனையில் குளம்போல் மழைநீர் தேங்கி நிற்கிறது. பேருந்து நிலையத்திலும் தண்ணீர் தேங்கியதால், மக்கள் அவதியடைந்தனர்.
பலத்த காற்றுடன் பெய்த மழையால் ராயப்பேட்டை ஜகதாம்பாள் காலணியில் மரம் முறிந்து கார் மீது விழுந்தது. மரம் முறிந்து விழுந்ததில் கார் கண்ணாடி உள்ளிட்டவை சேதமடைந்தன.
கனமழையால் சென்னை அண்ணா சாலையில் சில பகுதிகளில் இடுப்பளவுக்கு தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் பழுதாகி சாலையிலேயே நின்றுவிட்டதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைந்தனர். பட்டுலாஸ் சாலையில் நின்றிருந்த கார் ஒன்று ஒருபுறமாக கவிழ்ந்தது. அனைத்து வாகனங்களுமே வெள்ளத்தில் தத்தளித்தப்படியே சென்றன.
கனமழையால் காமராஜர் சாலை வெள்ளத்தில் தத்தளித்தது. அவ்வழியாக சென்ற வாகனங்கள் அனைத்துமே ஊர்ந்தபடியே சென்றன.
சென்னை அடுத்த பெரம்பூர் மேட்டுப்பாளையம் பகுதியில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து துர்நாற்றம் வீசுவதால் அங்கு வசிக்கும் மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.
மணலி விரைவு சாலையில் மழைநீர் தேங்கி ஆறு போல் காட்சியளித்தது. இதனால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் கடும் பாதிப்புக்கு ஆளாகினர்.
பாலவாக்கம் எம்.ஜி.ஆர்.நகர் பகுதியில் தெருக்கள், வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததுடன், ஆங்காங்கே மழைநீருடன் கழிவுநீரும் சேர்ந்து ஓடுவதால் சுகாதார சீர்க்கேடு ஏற்பட்டுள்ளது.
தேனாம்பேட்டை நக்கீரன் நகரில் தெருக்களில் தேங்கிய மழைநீர் வீடுகளுக்குள்ளும் புகுந்ததால் மக்கள் அவதிக்கு ஆளாகினர்.
புதுப்பேட்டை வேலாயுதம் தெரு, ஐயா சாமி பிள்ளை தெருவில் முழங்கால் அளவுக்கு மழைநீர் தேங்கியது.
சென்னையின் புறநகர் பகுதிகளான தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை, முடிச்சூர், பெருங்களத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால், சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்தது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதால், மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.
பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்தில் மரம் ஒன்று வேரோடு சாய்ந்தது.
மாமல்லபுரம், கோவளம், முட்டுக்காடு, கானத்தூர், நாவலூர், கேளம்பாக்கம், திருப்போரூர் உள்ளிட்ட இடங்களில் நள்ளிரவு முதல் பரவலாக பெய்த மழையால், சாலைகள் எங்கும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
திருப்போரூர், கேளம்பாக்கம் தையூர் சாலை, படூர் உள்ளிட்ட சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர். நீர்நிலைகள் நிரம்பியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கனமழை காரணமாக நந்தனம் முதலாவது பிரதான சாலையில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. வலுவிழந்து சுற்றுச்சுவர் இடிந்ததில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 4 கார்கள் மீது சேதமடைந்தன.
மெரினா கடற்கரை மற்றும் கடற்கரையின் சர்வீஸ் சாலைகளில் தேங்கிய நீர் அகற்றப்பட்டு வருகிறது. கால்வாய்கள் தோண்டப்பட்டு அதன் மூலம் மழைநீர் வடிய வைக்கப்பட்டு வருகிறது.
மேலும், தண்ணீர் அதிகளவில் தேங்கியதை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சாலை ஓரங்களில் உள்ள உயர் மின் விளக்குகளுக்கு செல்லும் மின் இணைப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என மாநகராட்சி தெரிவித்துள்ளது.
வடசென்னை பகுதியான சத்தியமூர்த்தி நகர் முதல் எர்ணாவூர் பாலம் வரை சாலைகளில் மழைநீர் தேங்கி ஆறு போல் பெருக்கெடுத்து ஓடுகிறது.
கனமழை காரணமாக நந்தனம் முதலாவது பிரதான சாலையில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. வலுவிழந்த சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 4 கார்கள் சேதமடைந்தன.
Comments