குழந்தைகள் நேய காவல் மையம்.. காவல்துறை புதிய முயற்சி..!
சென்னையில் உள்ள மகளிர் காவல் நிலையங்களுக்கு வரும் புகார்தாரர்களின் குழந்தைகள் விளையாடும் வகையில், குழந்தைகள் நேய காவல் மையம் தொடங்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள மகளிர் காவல் நிலையங்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான தனிப்பிரிவின் கீழ் செயல்பட்டு வருகிறது.
இது போன்ற காவல் நிலையங்களுக்கு பெரும்பாலும் குடும்ப பிரச்சனை காரணமாக குழந்தைகளுடன் வருகின்றனர். அப்போது, சீருடை அணிந்த காவலர்களை பார்க்கும் போது ஒரு வித அச்சம் ஏற்பட்டு, அவர்களுக்கு மன ரீதியான பாதிப்பு ஏற்படுவதாக குழந்தைகள் நல ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில், சென்னையில் உள்ள மகளிர் காவல் நிலையங்களில் குழந்தைகள் நேய காவல் மையம் தொடங்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் அச்சத்தை போக்கும் வகையில் சுவற்றில் ஓவியங்கள் வரையப்பட்டு, குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள், புத்தகம் உள்ளிட்ட பொருட்களை வைத்துள்ளனர்.
சென்னையில் உள்ள 35 மகளிர் காவல் நிலையங்களில், முதற்கட்டமாக 23 நிலையங்களில் இது போன்ற மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த சூழலானது காவல்நிலையங்களுக்கு வரும் புகார்தாரர்களுக்கு எவ்வித தயக்கத்தையோ, அச்சத்தையோ ஏற்படுத்தாமல், இயல்பான மனநிலையை கொடுக்கும் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இனி வரும் காலங்களில் காவல் நிலையங்களுக்கு வரும் குழந்தைகள் மகிழ்வான மனநிலையுடன் இருக்கவும்,
குழந்தைகளின் மனநிலை பாதிக்கப்படாமல் பாதுகாப்புடன் இருக்கவும், இத்திட்டம் வழிவகை செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
Comments