தமிழகம் முழுவதும் 22 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை
வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக கோவையில் திமுக பிரமுகர் வீடு மற்றும் ஈரோட்டை சேர்ந்த நந்தா கல்வி நிறுவனங்கள் உள்பட 22 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
ஈரோட்டில் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வரும் நந்தா கல்வி நிறுவனங்களுக்குச் சொந்தமான பள்ளிகள், கல்லூரிகள், மற்றும் உரிமையாளர் சண்முகம் என்பவருக்கு சொந்தமான வீடுகள், பண்ணை வீடுகள் உட்பட பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
சில ஆண்டுகளாக வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
அதே போன்று கோவை காளப்பட்டியில் திமுக மாநகர மேற்கு மாவட்ட பொறுப்பாளர் பையா கவுண்டர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். துக்க நிகழ்ச்சிக்காக ஈரோடு சென்றிருந்த அவர், திரும்பி வரும் வரை காத்திருந்த அதிகாரிகள், அவர் வந்த பின் வீட்டில் சோதனையை தொடங்கினர். அப்போது அங்கு திரண்டிருந்த பையா கவுண்டர் ஆதரவாளர்கள் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர்.
சென்னை, கோவை, ஈரோடு, திருப்பூர் உள்பட மொத்தம் 22 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல்லில் அரசு ஒப்பந்ததாரர் சத்தியமூர்த்தியின் வீடு, அலுவலகங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
அவரது இல்லம் அமைந்து உள்ள சூர்யா கார்டனிலும், கந்தசாமி நகரில் உள்ள அலுவலகத்திலும் 20 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுப்பட்டுள்ளனர். வரி ஏய்ப்பு செய்ததன் காரணமாக இந்த சோதனை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.
திருப்பூர் புதுராமகிருஷ்ணபுரம் பகுதியில் உள்ள எஸ். என். எக்ஸ்போர்ட்ஸ் என்ற ஏற்றுமதி நிறுவனத்திலும், அதன் பங்குதாரர்களான ஸ்ரீதர், சுந்தரம் ஆகியோர் வீட்டிலும் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர்.
இருவரின் வீடுகளிலும் மதியம் ஆரம்பித்த சோதனையானது மாலை வரை நடைபெற்றது. மூன்று குழுக்களாக வந்த அதிகாரிகள் நிறுவனத்தில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
Comments