அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை.. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்
தமிழகத்தில் பள்ளி- கல்லூரிகளை மீண்டும் திறப்பது குறித்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ வல்லுநர் குழு பரிந்துரைகள் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படுமென முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள், பண்டிகை நாள்களில் கூட்டம் கூடுவதால் கொரோனா பரவல் அதிகரித்தால் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து சென்னையிலுள்ள தலைமை செயலகத்தில் இருந்தபடி முதலமைச்சர் இன்று காணொலி காட்சி மூலம் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது பேசிய முதலமைச்சர், தமிழகத்தில் கொரோனா பாதித்தோருக்கு சிகிச்சை அளிக்கவும், நிவாரண பணிக்காகவும் இதுவரை 7 ஆயிரத்து 372 கோடியே 25 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.
பள்ளி கல்லூரிகளை மீண்டும் திறக்க அனுமதிப்பது குறித்தும், திரையரங்குகளை திறக்க அனுமதிப்பது குறித்தும் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.
எதிர்கட்சித்தலைவர்கள் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தமிழக அரசு மீது தொடர்ந்து விமர்சனம் மேற்கொண்டதாகவும், அண்டை மாநிலத்தை ஒப்பிட்டு தமிழகத்தில் பணிகள் முடங்கி வருவதாக குற்றச்சாட்டு வைத்ததாகவும் ஆனால் தமிழக அரசின் திறமையான நடவடிக்கைகளால், கொரோனா பரவல் படிப்படியாக குறைய துவங்கி உள்ளதாகவும், நோய் பரவல் கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.
கொரோனா காலத்திலும் 55 தொழில் நிறுவனங்களுடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டதையும் முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்.
Comments