வீரம்.. விஸ்வாசம்.. வலிமை.. பக்கர் வால்..! ஒரு நாயும் ஒன்பது குட்டிகளும்

0 2935
வீரம்.. விஸ்வாசம்.. வலிமை.. பக்கர் வால்..! ஒரு நாயும் ஒன்பது குட்டிகளும்

காட்டு விலங்குகளை எதிர்கொள்ளும் வல்லமை மிக்க பாகர்வால் நாயுடன், டச் ஷெப்பர்டு நாய் கலந்து உருவான 5 குட்டிகளுக்கு சென்னையில் கடுமையான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றது. காஷ்மீரில் இருந்து ஒரு நாயுடன் வந்து அதனை 9 நாய்களாக மாற்றிய போலீஸ் அதிகாரியின் சாமர்த்தியம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.

காஷ்மீர் பழங்குடியினமான பாகர்வால் மக்களால் அதிகமாக வளர்க்கப்படும் நாயினம் என்பதால் பாகர்வால் என்று பெயர் பெற்ற நாயினம் காட்டு விலங்குகளை தைரியமாக எதிர் கொள்ளும் சக்தி மிக்கது.

பாகர் இன மக்கள் தங்கள் ஆடுமாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச்செல்லும் போது உடன் இந்த நாய்களையும் உடன் அழைத்து செல்வது வழக்கம்.

புத்திக்கூர்மையும் , தாக்குதல் சக்தியும் மிக்க இந்த வகை நாய்கள் போலீஸ் மற்றும் ராணுவ பாதுகாப்புப் பணியில் இதுவரை அதிகாரப் பூர்வமாக பயன்படுத்தப்படவில்லை. இந்த நிலையில் சென்னை ஐ.சி.எப்பை சேர்ந்த ரெயில்வே பாதுகாப்பு படையின் முதன்மை ஆணையர் லூயிஸ் அமுதன் என்பவரின் முயற்சியால் பாகர்வால் மற்றும் டச் ஷெப்பர்டு இன நாய்களின் கலப்பால் பிறந்த நாய் குட்டிகள் முதன்முதலாக ரெயில்வே பாதுகாப்பு படையில் களம் காண தயாராகி வருகின்றன.

லூயிஸ் அமுதன் காஷ்மீரில் இருந்து பணிமாறுதலாகி சென்னைக்கு வந்த போது தன்னுடன் பெண் பாகர்வல் நாய் ஒன்றைக் கொண்டு வந்துள்ளார். தனிமையில் தவித்த அந்த நாயை டச் ஷெப்பர்டு வகை நாயுடன் கலக்கவைத்ததால், அந்த நாய் 9 குட்டிகளை ஈன்றுள்ளது.

அந்த 9 குட்டிகளுக்கும் போலீஸ் துறையில் அளிக்கப்படும் கடுமையான பயிற்சிகளை லூயிஸ் அமுதன் மேற்கொண்டார். அதில் 5 நாய்க்குட்டிகள் மிகவும் புத்திக்கூர்மையுடன் நடந்து கொண்டதால் அவற்றிற்கு புல்லட், பிளாக்கி, ஜாக்கி, ஆஸ்கர், ஜென்னி என பெயரிட்டு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றது.

ஏணி மூலம் கட்டடத்தின் உச்சிக்கு செல்வது, வலை பின்னலில் உயரத்தில் ஏற்றி அங்கிருந்து கீழே இறங்க செய்வது போன்ற அடிப்படை பயிற்சிகள், சென்னை பெரம்பூரில் அளிக்கப்பட்டன.

பலவிதமான பாதுகாப்பு, எச்சரிக்கை, தாக்குதல் நடத்தவும், கண்காணிப்பு பணிக்கும் பயன்படுத்தப்பட உள்ளதால் தீவிர பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

பயிற்சி முடிவில் காஷ்மீர் ரயில்வே பாதுகாப்புப் படையினரிடம் , பிறந்து 6 மாதமேயான இந்த 5 நாய் குட்டிகளும் ஒப்படைக்கப்பட உள்ளன.

ஓரிரு மாதங்களில் முழுமையான பயிற்சி முடித்த பின்னர் இந்த நாய்கள் காஷ்மீர் ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு உதவியாக பல்வேறு பாதுகாப்பு பணிகளுக்காக அனுப்பி வைக்க இருப்பதாக சென்னை ரயில்வே பாதுகாப்பு படை முதன்மை ஆணையர் லூயிஸ் அமுதன் கூறினார்.

இது போன்ற நாயினங்கள் இதுவரை போலீஸ் துறையில் பயன்படுத்தப்பட வில்லை என்றும் தான் அனுப்பும் புதியவகை நாய்கள் அந்த சாதனையை ஏற்படுத்தும் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments