எதிரிகளை கதறடிக்கும் வல்லமை பெறும் இந்தியா
அமெரிக்கா உடனான புதிய பாதுகாப்பு ஒப்பந்தத்தின் மூலம் இந்திய முப்படைகளின் வலிமை அதிகரிக்கும். இந்திய ஏவுகணைகளின் தாக்குதல் மிக துல்லியமாகும்.
இந்தியா- அமெரிக்காவின் அமைச்சர்கள் பேச்சுவார்த்தையை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையே பாதுகாப்பு துறையில் அடிப்படை தகவல் பரிமாற்றம் மற்றும் கூட்டுறவு தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இது அமெரிக்கா அதன் மிக நெருங்கிய நட்பு நாடுகளுடன் மட்டுமே மேற்கொள்ளும் மூன்றாவது மிக முக்கிய ஒப்பந்தமாகும்.
மற்ற இரு ஒப்பந்தங்கள் ராணுவ தளவாட பரிமாற்றம், பாதுகாப்பு தகவல் பரிமாற்றம் தொடர்பானவை ஆகும். புதிய ஒப்பந்தத்தின் மூலம் இந்தியா- அமெரிக்க படைகள் மிக முக்கியமான, வகைப்படுத்தப்பட்ட தகவல்களை பரிமாறி கொள்ளலாம். மேலும் கடல் மற்றும் வான் சார் இலக்குகள் குறித்த தகவல்களும் பரிமாறப்படும்.
அமெரிக்காவின் மிக நவீன தொழில் நுட்பம் கொண்ட செயற்கைகோள்கள் அளிக்கும் புவிசார், கடல்சார்,வான் சார் தகவல்களை இனி இந்திய முப்படைகள் பயன்படுத்திக் கொள்ள முடியும். மிக முக்கியமாக எதிரிகளின் இலக்குகள் குறித்த துல்லிய தகவல் இனி இந்தியாவுக்கு கிடைக்கும்.
தகவல் டிஜிட்டல் அல்லது அச்சடித்த காகித வடிவில் இந்திய படைகளுக்கு கிடைக்கும். மேலும் எதிரிகளின் நிலைகள் குறித்த வரைபடங்கள், கடல் மற்றும் வான் சார் இலக்குகளின் வரைபடங்கள், புகைப்படங்கள், இலக்கின் புவியியல் தன்மை உள்ளிட்ட அனைத்து தகவல்களும் கிடைக்கும்.
இந்த தகவல்கள் அனைத்தும் வகைப்படுத்தப்பட்டு வழங்கப்படும். மேலும் இரு நாடுகள் தவிர வேறு யாரும் அறியாத வகையில் மிக ரகசியமாகவே இந்த தகவல் பரிமாற்றம் இருக்கும். ஒப்பந்தம் மூலம் இரு நாடுகளும் தகவல்களை பரிமாறி கொண்டாலும் கூட, இது இந்தியாவுக்கே கூடுதல் சாதகமாக இருக்கும்.
நாட்டின் வடக்கு எல்லையில் உள்ள எதிரிகளின் நிலைகள் குறித்த மிக துல்லியமாக தகவல்களை இனி இந்தியா பெற முடியும். மேலும் எதிரிகளின் நிலைகள் குறித்த மிக சரியான இலக்கு விபரம் கிடைக்கும் என்பதால், ஏவுகணை தாக்குதலில் இந்தியாவின் வலிமை பல மடங்கு அதிகரிக்கும்.
இதே போல இந்திய விமானப்படையின் தாக்குதல் திறனும் மிக துல்லியமாகும். எதிரிகளின் நாடுகளில் செயல்படும் பயங்கரவாத முகாம்களின் இருப்பிடம் குறித்த துல்லிய தகவல் கிடைக்கும் என்பதால் அவற்றை அழிப்பதும் எளிதாகும்.
நாட்டின் வடக்கு மற்றும் மேற்கு எல்லையில் உள்ள எதிரிகளுக்கு இனி முப்படைகளும் சிம்ம சொப்பனமாகும் நிலை உருவாகும் என்று பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Comments