சிறுவனின் உயிரை குடித்த பப்ஜி!!!
ஈரோட்டில், பப்ஜி வீடியோ கேமுக்கு அடிமையாகி மன நிலை பாதிக்கப்பட்ட சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முழுநேரமும் செல்போனில் மூழ்கி கிடக்கும் பிள்ளைகளை பெற்றோர் கவனிக்க மறந்தால் என்ன மாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்கு இந்த சம்பவம் சான்று.
கோவை மாவட்டம் சூலூரை சேர்ந்த கந்தவேல் - ரமாபிரபா தம்பதியினரின் 16 வயது மகன் அருண். கந்தவேல் சென்னையில் தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிவதால், குடும்பத்துடன் சென்னையில் ஷெட்டில் ஆகியுள்ளார். 9-ம் வகுப்பு படித்து வந்த அருண், அடிக்கடி தந்தையின் செல்போனில் பப்ஜி கேம் விளையாடி வந்துள்ளான்.
ஒரு கட்டத்தில் முழு நேரமும் பப்ஜியே விளையாடிக் கொண்டிருப்பதை கவனித்த பெற்றோர் செல்போன் கொடுப்பதை தவிர்த்து வந்துள்ளனர். இதனால், மனதளவில் மிகுந்த சோர்வடைந்த அருணை கோவை மாவட்டம் சூலூரில் உள்ள மன நல மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு 2 மாதங்களாக அங்கு தங்கி சிகிச்சை பெற்று வந்த அருண், பப்ஜி மீதான ஆர்வத்தை விடாமலேயே இருந்து வந்துள்ளான். இந்த நிலையில், அருணுக்கு செல்லப்பிராணிகள் வளர்ப்பது மிகவும் பிடித்தமானது என்பதால், மன நல ஆலோசகரின் அறிவுரையின் பேரில், பப்ஜி மீதான கவனத்தை திசை திருப்புவதற்காக ஈரோடு மாவட்டம் புளியம்பட்டி பண்ணை வீட்டில் 3 மாதங்களாக தங்க வைத்துள்ளளனர்.
இந்த நிலையில், நேற்று இரவு புளியம்பட்டி டவுனுக்கு பெற்றோர் சென்ற நிலையில், தனியாக வீட்டில் இருந்த அருண் கயிற்றில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டான். சிறுவனின் உடல்பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துமனையில் வைக்கபட்டுள்ளது.
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழிக்கு ஏற்ப, பப்ஜி விளையாட்டு மீதான எல்லை மீறிய ஆர்வத்தால் சிறுவனின் உயிர் பலியாகியுள்ளது. அதேசமயம், சிறுவனின் நடவடிக்கைகளை ஆரம்பத்திலேயே பெற்றோர் கவனித்து, அறிவுரைகள் வழங்கியிருந்தால் இந்த விபரீதம் நிகழ்ந்திருக்காது என சுட்டிக்காட்டுகின்றனர் மன நல நிபுணர்கள்
Comments