இந்தியா - அமெரிக்கா இடையே புதிய ஒப்பந்தங்கள்
இந்தியா-அமெரிக்கா இடையே நடைபெற்ற 2+2 பேச்சுவார்த்தையில், அடிப்படை தகவல் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பு உள்பட 4 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. ஜனநாயகத்திற்கு எதிரான நாடாக விளக்கும் சீனாவின் அச்சுறுத்தலை, அமெரிக்காவும், இந்தியாவும் இணைந்து எதிர்கொள்வது குறித்து கவனம் செலுத்த வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
தலைநகர் டெல்லியில், மூன்றாவது முறையாக, இந்திய-அமெரிக்க நாடுகளின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது. டெல்லி ஹைதராபாத் இல்லத்தில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ, பாதுகாப்புத்துறை அமைச்சர் மார்க் எஸ்பர் பங்கேற்றனர். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் பங்கேற்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த பேச்சுவார்த்தையின்போது, பாதுகாப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அடிப்படை தகவல் பரிமாற்றம் ஒத்துழைப்பு உள்பட 4 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. BECA எனப்படும் ராணுவ தகவல் பரிமாற்ற ஒப்பந்தமும் இதில் ஒன்று.
இதேபோன்று, பாதுகாப்புத்துறையில், சுதந்திரமான, அனைவருக்கும் பொதுவான இந்திய-பசிபிக் பிராந்தியத்தை கட்டமைப்பதில் ஏற்படும் சவால்களை சமாளிக்க இரு நாடுகளும் இணைந்து செயல்படுவது குறித்து உடன்பாடு எட்டப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, டெல்லி சவுத் பிளாக்கில், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசர் அஜீத் தோவலை, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ, அந்நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் மார்க் எஸ்பர் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.
அடுத்தடுத்த சந்திப்புகளுக்குப் பிறகு, டெல்லி ஹைதராபாத் ஹவுசில், அமெரிக்க மற்றும் இந்திய வெளியுறவு மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர்கள், கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ,
ஜனநாயகத்திற்கு எதிரானதாக விளங்கும் சீனாவினால் ஏற்படும் அச்சுறுத்தலை எதிர்கொள்ள அமெரிக்காவும் இந்தியாவும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
முன்னதாக பேசிய அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் மார்க் எஸ்பர், இந்திய-பசிபிக் பிராந்தியத்தில், ஆக்கிரமிப்பு எண்ணத்துடன் அதிகரித்து வரும் சீனாவின் அச்சுறுத்தலை, இந்தியாவும், அமெரிக்காவும், தோளோடு, தோள் நின்று போராடி வெற்றிக்கொள்ளும் என நம்பிக்கைத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ, பாதுகாப்புத்துறை அமைச்சர் மார்க் எஸ்பர் ஆகியோர், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினர். அப்போது, மத்திய அமைச்சர்கள் ஜெய்சங்கர், ராஜ்நாத் சிங் உடனிருந்தனர்.
Comments