விடுமுறை தின சந்திப்பு... குளியலறைக்குள் பதுங்கிய இன்ஸ்டாகிராம் மன்மதன்..! சுற்றி வளைத்த போலீஸ்
இன்ஸ்டாகிராமில் இளம் பெண்களை காதல் வலையில் வீழ்த்தி வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் வீடுபுகுந்து அத்துமீறும் மன்மதன் சிதம்பரத்தில் சிக்கியுள்ளான். 9 ஆம் வகுப்பு மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்தவன் போலீஸ் பிடியில் சிக்கிய சம்பவத்தின் திடுக்கிடும் பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு
சிதம்பரத்தை சேர்ந்த பள்ளி ஆசிரியை ஒருவர் காலையில் வித்யாரம்பம் நிகழ்ச்சிக்காக பள்ளிக்கு சென்று விட்டு வீடு திரும்பியுள்ளார். 9-ம் வகுப்பு படித்து வரும் மகள் மட்டும் வீட்டில் இருந்த நிலையில் மாணவி வந்து கதவை திறந்துள்ளார்.
பதற்றத்துடன் காணப்பட்ட மகளை பார்த்து என்ன நடந்தது என்று கேட்ட போது அவர் படுக்கை அறைக்குள் ஒருவர் இருப்பதாகக் கைகாட்டியுள்ளார். படுக்கை அறை உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது. மகள் வெளியே இருக்க அந்த அறைக்குள் இருப்பது யார் ? என்ற அச்சத்துடனும், குழப்பத்துடனும் அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்தார் ஆசிரியை, அவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்த போலீசார் படுக்கை அறை கதவின் தாழ்ப்பாளை உடைத்து உள்ளே நுழைந்த போது, அங்கிருந்த நபர் குளியலறைக்குள் சென்று உள்பக்கமாக தாழிட்டுக் கொண்டான். நீண்ட போராட்டத்திற்கு பின்னர் பதுங்கிருந்த அந்த நபரை காவல்துறையினர் சுற்றிவளைத்து பிடித்தனர்.
விசாரணையில் அவன் விருதாச்சலம் பெரியவடவாடி கிராமத்தைச் சேர்ந்த 20 வயது பொறியியல் மாணவன் ஜெயக்குமார் என்பது தெரியவந்தது. கடந்த 6 மாதமாக அந்த மாணவியிடம் இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய ஜெயக்குமார், அவரை காதல் வலையில் வீழ்த்தி நேரில் சந்தித்து மனம் விட்டு பேச வேண்டும் என்று ஏமாற்றி, கடந்த ஆகஸ்ட் 15 ந்தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரம் புகுந்து மாணவியை பலாத்காரம் செய்ததோடு அதனை வீடியோவாகவும் எடுத்துக் வைத்துள்ளான்.
அதனை வைத்து மிரட்டி மாணவியை தன்னுடைய ஆசைக்கு மீண்டும் இணங்க வற்புறுத்தியுள்ளான். தனது தாய் வீட்டில் இல்லாதது குறித்து மாணவி தெரிவித்ததும் அங்கு வந்து அத்துமீறியுள்ளான். அதற்குள்ளாக பள்ளியில் இருந்து ஆசிரியை வீடு திரும்பியதால் ஜெயக்குமார் கையும் களவுமாக சிக்கிக் கொண்டது தெரியவந்தது.
ஜெயக்குமாரின் செல்போனை போலீசார் சோதனையிட்டதில், பல பெண்களுடன் அவன் இருப்பது தெரிய வந்தது. அவை யெல்லாம் இன்ஸ்டாகிராம், முகனூல் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் தன்னுடைய காதல் வலையில் சிக்கிய பெண்கள் என்று விவரித்த ஜெயக்குமார், அந்த பெண்களுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு விடுவதாக மிரட்டியும், ஆசைவார்த்தை கூறி மயக்கியும் அத்துமீறலில் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பலாத்கார வழக்கில் மாணவன் ஜெயக்குமார் சிக்கியதும் அவனுக்கு ஆதரவாக காவல் நிலையம் வந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பிரமுகர்கள் சிலர் அந்த மாணவனை போலீசில் சிக்கவைத்தவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் அந்த மாணவன் மீது வழக்குப் போடக்கூடாது என்று ரகளை செய்தனர்.
இதற்கிடையே போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட ஜெயக்குமாரை பெண் ஒருவர் ஆவேசமாக தாக்கினார்
தனது மகள் வாழ்க்கையை சீரழித்ததோடு, பல பெண்களின் வாழ்க்கையில் புகுந்து அடங்காமல் ஆட்டம் போட்ட ஜெயக்குமார் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாணவியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் ஜெயகுமாரை போலீசார் கைது செய்தனர்.
இவன் மீது பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளித்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
இன்ஸ்டாகிராமில் கணக்கு வைத்திருக்கும் பெண்கள் இத்தகைய கபட நாடக வேஷதாரிகளை நம்பாமல் உஷாராக இருப்பது நலம், அதைவிடுத்து காதலில் விழுந்தால், வாழ்க்கையை இழந்து தவிக்கும் துர்பாக்கிய நிலை ஏற்படும் என்று போலீசார் எச்சரிக்கின்றனர்.
Comments