2 பிளஸ் 2 பேச்சுவார்த்தை - இந்தியா வந்தனர் அமைச்சர்கள்
2 பிளஸ் 2 பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் போம்பியோ, பாதுகாப்பு அமைச்சர் மார்க் எஸ்பர் இந்தியா வந்தனர்.
இந்திய-அமெரிக்க உறவை வலுப்படுத்தும் விதமாக, கடந்த 2 ஆண்டுகளில் 3வது முறையாக இருநாட்டு பாதுகாப்பு மற்றும் வெளியுறவு அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
அதில் பங்கேற்பதற்காக, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் போம்பியோவும், பாதுகாப்பு அமைச்சர் மார்க் எஸ்பரும் டெல்லி வந்து சேர்ந்தனர். விமான நிலையத்தில் அவர்களை அமெரிக்க தூதரக அதிகாரிகள் மற்றும் மத்திய அரசு அதிகாரிகள் வரவேற்றனர்.
நாளை வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோருடன் அமெரிக்க அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.
ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த சாட்டிலைட் தரவுகளை பங்கிடுவது குறித்த ஒப்பந்தம், ராணுவ தளவாட ஒப்பந்தம் உள்ளிட்டவை இந்த சந்திப்பில் கையெழுத்தாக உள்ளன.
லடாக்கில் சீனாவுடனான எல்லைப் பதற்றம், இந்திய-சீன கடற்பரப்பில் சீனாவின் ஆதிக்கம் போன்ற அம்சங்களும் பேச்சுவார்த்தையில் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் மோடியையும் அமெரிக்க அமைச்சர்கள் சந்திக்க உள்ளனர். இந்த பயணம் குறித்து டுவிட் செய்துள்ள மைக் போம்பியோ, இந்தியா போன்ற வலிமையான, சுதந்திரமான நாடுடன் இணைந்து பயணம் செய்ய கிடைத்த வாய்ப்புக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
அமைச்சர்களின் பயணத்தை ஒட்டி வெளியிட்ட அறிக்கையில், இந்தியா ஆசிய-உலக வல்லரசாக உருவெடுப்பதை வரவேற்பதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியா வந்துள்ள அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் மார்க் எஸ்பர் தலைமையிலான அமெரிக்க குழுவினர், டெல்லியில், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான குழுவினரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், ராணுவ தளபதி எம்.எம், நரவானே, விமானப்படை தளபதி பதோரியா, கடற்படை தளபதி கரம்பீர் சிங் உள்ளிட்டோர் இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டுள்ளனர். முன்னதாக பாதுகாப்பு அமைச்சகம் அமைந்துள்ள சவுத்பிளாக்கில் மார்க் எஸ்பருக்கு ராணுவ மரியாதை அளிக்கப்பட்டது.
Comments