சாத்தான்குளம் காவல்நிலையத்தில் இருந்த ரத்தக் கறைகள் ஜெயராஜ் - பென்னிக்ஸ் டி.என்.ஏ, வுடன் ஒத்துப்போவதாக சிபிஐ குற்றப்பத்திரிகை

0 6775

சாத்தான்குளம் காவல்நிலையத்தில் இருந்த ரத்தக் கறைகள் ஜெயராஜ்- பென்னிக்ஸ் டி.என்.ஏவுடன் ஒத்துப்போவது  தடயவியல்  பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக சிபிஐ குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பபட்டுள்ளது. 

சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையின் நகல்கள் வெளியாகி உள்ளன.

அதில், காவல்நிலையத்தின்  கழிப்பறை, சுவர்கள் லத்தி, மேஜைகள் என பல்வேறு இடங்களில் தந்தை-மகன் இருவரது ரத்தம் படிந்திருந்தது என்றும், தடயவியல் பரிசோதனையில் அந்த ரத்தக் கறைகள் இறந்துபோன ஜெயராஜ், பென்னிகிஸ் டிஎன்ஏ உடன் பொருந்தியது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரவு முழுவதும் தாக்கப்பட்டதில் இருவரும் பலத்த காயம் அடைந்ததால், அதிகமான ரத்த கசிவு ஏற்பட்டுள்ளது என்றும், சிந்திய ரத்தத்தை காயம்பட்ட தந்தை மகன் இருவர் மூலமே துடைக்கசொல்லியும் துன்புறுத்தி உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

வீட்டிலிருந்து மாற்று உடைகள் கொண்டுவர சொல்லி இரண்டு முறை உடைகள் மாற்றப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் மருத்துவர் வெண்ணிலா பரிசோதனை செய்தபோது அலட்சியமாக செயல்பட்டு, ஜெயராஜ், பென்னிக்ஸ் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோயை சான்றிதழில் குறிப்பிடாமல் சிறையில் அடைக்க தகுதியானவர்கள் என தகுதி சான்று கொடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இருவரையும் சிறையில் அடைக்கும் போது சிறை காவலர்கள் மற்றும் சிறை மருத்துவர் ஆகியோருடைய ஆவணங்களிலும்  இருவர் உடலில் பல இடங்களில் ரத்த காயங்கள் இருந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments