முப்படைகளும் எதற்கும் ஆயத்தமாக இருக்குமாறு தலைமைத் தளபதி பிபின் ராவத் அறிவுறுத்தல்
கடுங்குளிர் நிலவும் கிழக்கு லடாக் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள வீரர்களுக்கு மரியாதையும், உத்வேகமும் அளிக்கும் வகையில், முப்படைகளும் போர்க்கால அடிப்படையில் எதற்கும் ஆயத்தமாக இருக்குமாறு முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆயிரத்து 597 கிலோமீட்டர் நீள கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டில் டாங்குகள், பீரங்கிகளுடன் படைகள் குவிக்கப்பட்டுள்ள இந்த காலகட்டம் இயல்பான காலகட்டம் அல்ல என்றும், முப்படைகளும் அமைதிக்காலத்திற்கான பொழுதுபோக்கு, கொண்டாட்டங்களை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும் என பிபின் ராவத் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
கிழக்கு லடாக் எல்லையில் எந்த நேரத்திலும் நிலைமை மோசமடையக் கூடும் என்பதால், எத்தகைய ஒரு நிலையையும் எதிர்கொள்ள தயாராக வேண்டும் எனபதே இதன் பொருள் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடற்படையின் கீழ் வரும், சிறப்பு போர் நடவடிக்கைகளுக்கான, மார்க்கோஸ் எனப்படும் மரைன் கமாண்டோ படையும் கிழக்கு லடாக் எல்லையில் நிறுத்தப்பட உள்ளது.
பூமியின் துருவப் பகுதிகளில் உள்ளது போல, பனிப்பொழிவு, உறைய வைக்கும் காற்று என கடுங்குளிர் நிலைக்கு பழகும் வகையில் மற்ற சிறப்பு படைப் பிரிவுகளுடன் மரைன் கமாண்டோக்களும் நிறுத்தப்பட உள்ளனர்.
ஏற்கெனவே கிழக்கு லடாக் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள வீரர்களுக்கு கடுங்குளிர் நிலைக்கு ஏற்ற ஆடைகள், முகக் கவசங்கள், அமெரிக்க ராணுவத்திடமிருந்து நவம்பர் முதல் வாரத்தில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments