அமெரிக்க அமைச்சர்கள் இன்று இந்தியா வருகை..!
இருதரப்பு பேச்சுவார்த்தைக்காக அமெரிக்கா வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ மற்றும் பாதுகாப்பு அமைச்சர் மார்க் டி எஸ்பர் (Mark T Esper) ஆகியோர், இன்று இந்தியா வருகின்றனர்.
இருநாடுகளுக்கு இடையேயன உறவை வலுப்படுத்தும் விதமாக, 3வது ஆண்டாக இந்தியா மற்றும் அமெரிக்காவின் பாதுகாப்பு மற்றும் வெளியுறவு அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இதற்காக அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ மற்றும் பாதுகாப்பு அமைச்சர் மார்க் டி எஸ்பர் (Mark T Esper) ஆகியோர், இன்று இந்தியா வருகின்றனர்.
இதையடுத்து, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோருடன் அவர்கள் நாளை ஆலோசனை நடத்த உள்ளனர். இதில், நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள ராணுவ தொழில்நுட்பம், தளவாடங்கள் மற்றும் புவியியல் வரைபடங்களைப் பகிர்வதற்கான ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் எனவும், லடாக் விவகாரம், இந்தோ-சீன கடல் பரப்பில் சீனாவின் ஆதிக்கம் மற்றும் பல்வேறு பிராந்திய பிரச்னைகள் குறித்தும் விவாதிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து, பிரதமர் மோடியையும் அமெரிக்க அமைச்சர்கள் சந்தித்து பேச உள்ளனர். லடாக் பகுதியில் சீனா உடனான மோதல் போக்கு மற்றும் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு ஒரு வார காலமே இருக்கும் சூழலில், நடைபெறும் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
Comments