ஹூக்கா பார்களில் போதையில் இளசுகள் ஆட்டம் அதிரடி சோதனை : 14 பேர் கைது
சென்னையில் உணவகங்கள் என்ற பெயரில் இரவு நேரங்களில் இளசுகளை வைத்து போதையில் ஆட்டம் போட்டதாக கூறப்படும் 8 ஹூக்கா பார்களில் அதிரடி சோதனை நடத்தி 14 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அலாவுதீன் அற்புத விளக்கு போன்று இருக்கும் அலங்கார ஜாரில் இருந்து நீளும் குழாய்களை வாயில் வைத்து புகை இழுக்கும் இவ்வகை பார்கள் சென்னையில் புற்றீசல் போல் பெருகி வருகிறது.
சினிமாவில் குத்தாட்ட பாடல்களில் காட்டுப்படும் ஹூக்கா பார்களால் ஈர்க்கப்படும் பணக்கார இளசுகள் பலர் இரவானால் இங்கு வந்து ஆட்டம் போடுகின்றனர். ஹூக்கா எனும் இந்த போதை பார்கள் ஊரடங்கு தளர்வுகளுக்கு பிறகு இளசுகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
இந்த பார்களில் இரவு தொடங்கி விடிய விடிய ஆட்டம் நடப்பதாக வந்த புகாரை அடுத்து சென்னை நுங்கம்பாக்கம், ஆயிரம் விளக்கு மற்றும் திருவல்லிக்கேணி ஆகிய இடங்களில் 8 இடங்களில் நுங்கம்பாக்கம் சரக உதவி ஆணையர் முத்துவேல்பாண்டி தலைமையில் போலீசார் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, கஃபே, ரெஸ்டாரண்ட் என பெயரிட்டு சிலர் அனுமதியின்றி ஹுக்கா பார்கள் நடத்துவதும், விதிகளை மீறி பள்ளி, கல்லூரி பயில்வோர், சிறுவர் சிறுமியர், இளம் பெண்கள் போன்றோர் அனுமதிக்கப்பட்டு போதையில் ஆட்டம் போட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து ஹூக்கா பார்களை இழுத்து மூடிய போலீசார், அங்கிருந்த நிர்வாகிகள் 14 பேரை கைது செய்தனர். ஹூக்கா எனும் குடுவை புகைப்பான்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஹுக்கா போதைக்காக இரண்டாயிரம் முதல் மூவாயிரம் ரூபாய் வரை வசூலிப்பதாக கூறப்படுகிறது. ஹூக்கா குடுவையில் கஞ்சா உள்ளிட்ட பல வகை போதை பொருட்களை கலப்பதாக காவல் துறையினர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஆரம்பத்தில் இவ்வகை பார்களுக்கு தடை விதித்திருந்தாலும், தற்போது பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அனுமதி பெற்று இயங்கிவருவதாகவும், இருப்பினும் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை பயன்படுத்துவது, இளவயது பெண்கள், இளைஞர்களை ஹூக்கா புகைக்க அனுமதிப்பது மற்றும் கொரோனா பரவல் சூழலை ஏற்படுத்துவது என விதிகளை மீறி இயங்குவதால் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
Comments