”ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை கொண்டாட்டம்” கோயில்கள், வீடுகளில் சிறப்பு பூஜை

0 4568
”ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை கொண்டாட்டம்” கோயில்கள், வீடுகளில் சிறப்பு பூஜை

தமிழகம் முழுவதும் இன்று ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆண்டுதோறும் நவராத்திரி பண்டிகையின் 9-வது நாளில் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. நம்முடைய தொழில், வேலைக்கு பயன்படுத்தும் உபகரணங்களுக்கு பூஜை செய்யும் முக்கிய பண்டிகையாக ஆயுத பூஜை கருதப்படுகிறது.

அந்த வகையில், தமிழகம் முழுவதும் தொழில் நிறுவனங்கள், வீடுகளில் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆயுத பூஜைக்காக நிறுவனத்தின் பெயர் பலகைகள், வாகனங்கள், இயந்திரங்கள் உள்ளிட்ட பொருட்களுக்கு சந்தனம், குங்குமம் வைத்து, மாலை, வாழை இலையுடன் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

பழங்கள், சுண்டல், பொரி, அவல் உள்ளிட்டவற்றை கொண்டு படையல் போட்டு, தீபாரதனை காட்டி வழிபாடு நடத்தப்பட்டது. தொழிலாளர்களுக்கு போனஸ் தொகையுடன், சுண்டல், பொறி பிரசாதமாக வழங்கப்பட்டது.

தூத்துக்குடி:

தூத்துக்குடியில் சரஸ்வதி பூஜையை ஒட்டி, கலைமகள் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கலைமகள் சரஸ்வதிக்கு வேதமந்திரங்கள் முழங்க சிறப்பு அலங்காரத்துடன் நடைபெற்ற இந்த பூஜையில் ஏராளமான குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் கலந்து கொண்டனர்.

சேலம்:

சேலத்தில் காலை முதலே ஏராளமானோர் ஆயுத பூஜை விழாவை சிறப்பாக கொண்டாடினர். நகை பட்டறைகள், இரண்டு சக்கர வாகனங்கள், கார்கள், தொழிற்சாலைகள், ஜவுளி நிறுவனங்கள் ஆகியவை காலையிலேயே உபகரணங்கள், இயந்திரங்களுக்கு பூஜை செய்து, வழிபாடு நடத்தினர். பல இடங்களில் ஆயுத பூஜைக்காக கடைகள் திறக்கப்பட்டு, பூஜைக்கு பின்னர் அடைக்கப்பட்டது. பூஜைக்கு பிறகு, திருஷ்டி கழிக்கும் விதமாக பூசணிக்காய் உடைக்கப்பட்டது.

 திருப்பூர்:

திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களிலும் ஆயுத பூஜை சிறப்பாக கொண்டாடப்பட்டது. பனியன் நிறுவனங்களில் உள்ள எந்திரங்கள் பூக்கள் மற்றும் வண்ண தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு பூஜை நடத்தப்பட்டது. இதில் பனியன் நிறுவன ஊழியர்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு வழிபட்டனர்.

திருவாரூர்:

சரஸ்வதி பூஜையை ஒட்டி, திருவாரூர் மாவட்டம் கூத்தனூரில் அமைந்துள்ள மகா சரஸ்வதி அம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. பின்னர், அம்மனுக்கு வெண்பட்டு ஆடை அணிவித்து தீபாரதனை காட்டப்பட்டது. கொரானா அச்சுறுத்தலால் குறைந்த அளவு பக்தர்கள் கலந்துக்கொண்டனர். தங்களுடைய குழந்தைகளுக்காக புதிதாக வாங்கிய நோட்டு, பேனா, பென்சில் வெண்தாமரை ஆகியவற்றை வைத்து சரஸ்வதி அம்மனை வழிப்பட்டனர். கோயிலுக்கு வந்த பக்தர்கள் அனைவரும் உடல் வெப்ப பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments