ஆப்பசைத்த ஐஐடி பொறியாளர்.. ஆப்படித்த ரெயில்வே போலீஸ்..! ரூ.20 லட்சம் மோசடியில் கைது..!
தட்கல் டிக்கெட்டை வேகமாக முன்பதிவு செய்யலாம் என்று செல்போன் செயலி ஒன்றை வெளியிட்ட ஐஐடி பொறியாளர் ஒருவர், அதனை சட்ட விரோதமாக ஐ.ஆர்.சி.டி.சி செயலியுடன் இணைத்து தட்கல் டிக்கெட் முன்பதிவு மூலம் 20 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆப்பசைத்த பொறியாளர், போலீசின் பொறியில் சிக்கிய பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...
பண்டிகை காலங்களில் சொந்த ஊர்களுக்கு செல்ல ரெயில்களில் பயணச்சீட்டு முன்பதிவு செய்வது என்பது பலருக்கும் சவாலான வேலையாகும். அந்த வேலையை எளிதாக்கவும், தட்கல் டிக்கெட்டை கூட விரைவாக முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் பிளே ஸ்டோர்களில் சில செல்போன் செயலிகள் பயன்பாட்டில் உள்ளன.
அந்தவகையில் காரக்பூர் ஐஐடியில் எம்.டெக் பட்டம் பெற்ற திருப்பூர் மாவட்டம் காங்கயம் பொத்திபாளையத்தைச் சேர்ந்தவர் எஸ்.யுவராஜா என்ற பொறியாளர் , சூப்பர் தட்கல், சூப்பர் தட்கல் ப்ரோ ஆகிய இரு செயலிகளை அறிமுகப்படுத்தி இருந்தார்.
தட்கலில் டிக்கெட் எடுப்பதற்கு அதிகாலையில் எழுந்து தவம் கிடக்கும் பயணிகள் மத்தியில், இவரது செயலியை பயன்படுத்தியவர்கள் காலையில் முதல் டிக்கெட்டை முன்பதிவு செய்ததாக கூறப்படுகின்றது. யுவராஜாவின் செயலி மூலமாக முன்பதிவு செய்ய உள்ளே நுழைபவர்களிடம் அவர்கள் வழங்கும் காயின் மதிப்புக்கு ஏற்ப செயலியின் இணைய வேகமும், சேவை கட்டணமும் அதிகரிக்கும் என்று கூறப்படுகின்றது. குறைந்த பட்சம் ஒரு டிக்கெட்டுக்கு 100 ரூபாய் வரை சேவை கட்டணமாக யுவராஜாவின் வங்கிக்கணக்கிற்கு சென்றுள்ளது.
டிக்கெட் முன்பதிவு செய்யும் நபர்களோ, மொத்த பணத்தையும் ரெயில்வே நிர்வாகம் எடுத்துக் கொள்வதாக நினைத்திருந்த நிலையில் யுவராஜா கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை மட்டும் தட்கல் முன்பதிவுக்கான சேவை கட்டணமாக 20 லட்சம் ரூபாயை தனது செயலியை பயன்படுத்திபவர்களிடம் இருந்து சட்ட விரோதமாக வசூலித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையில் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த யுவராஜா, கொரோனா ஊரடங்கு காரணமாக சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். மத்திய அரசின் செயலியை தனியார் தங்கள் செயலியுடன் இணைத்து மக்களை ஏமாற்றி கமிஷன் மூலம் வருமானம் ஈட்டியது மோசடியான செயல் என்பதால், இந்த செயலியை வடிவமைத்து சத்தமில்லாமல் லட்சங்களை வருமானமாக பெற்ற யுவராஜ் மீது சென்னையில் உள்ள ரயில்வே சைபர் கிரைம் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து திருப்பூர் ரயில்வே பாதுகாப்புப்படையினர் யுவராஜை விசாரணைக்கு அழைத்துச்சென்று கைது செய்தனர்.
ரெயில்வேயின் செயலியை விட யுவராஜா கண்டுபிடித்த செயலி வேகமாக டிக்கெட்டை முன்பதிவு செய்கிறதல்லவா ? இதில் என்ன மோசடி இருக்கின்றது என சிலருக்கு சந்தேகம் எழலாம், உண்மையில் டிக்கெட் முன்பதிவு என்பது ஐ.ஆர்.சி.டி.சி இணையத்தின் வழக்கமான வேகத்திலேயே நடக்கும், ஆனால் அவரது செயலியில் வேகமாக, அதிவேகமாக டிக்கெட்டுக்களை முன்பதிவு செய்யலாம் என்று ஏமாற்றி கூடுதல் காயின்களை பயன்படுத்துங்கள் என தூண்டி அவரது செயலியை பதிவிறக்கம் செய்த 1 லட்சம் பேரிடமும் கமிஷனாக கூடுதல் கட்டணம் பெற்று பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக ரெயில்வே போலீசார் குற்றஞ்சாட்டுகின்றனர்.
தட்கல் டிக்கெட்டை வீட்டில் இருந்தபடியே முன்பதிவு செய்ய பிரத்யேக ஆப் தயார் செய்தது குற்றமல்ல, அதனை முறையான அனுமதி பெற்று, அவர் கூறியபடியே வேகமாக டிக்கெட் முன்பதிவு செய்யும் வகையில் ரெயில்வேக்கு வடிவமைத்து கொடுத்திருந்தால் யுவராஜா சாதனையாளராக கருதப்பட்டிருப்பார்..! அவரது போதாத காலம் அவர் ஆப்பசைத்த குரங்காக போலீசில் சிக்கி ஜெயிலில் அடைக்கப்பட்டதால் கம்பி எண்ணும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
Comments