சன்னிதானத்தில் பாயாசம் சாப்பிடும் கோவில் முதலை..! குருக்களின் பாடலால் குதுகலம்
கேரளாவில் பிரசித்தி பெற்ற அனந்தபத்மநாபசாமி கோவில் குளத்தில் 80 ஆண்டுகளாக உயிர்வாழ்வதாக கூறப்படும் ராட்சத முதலை ஒன்று முதன் முதலாக கோவிலின் சன்னிதானத்துக்குள் வந்து சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. பாயாசம் சாப்பிட்டு பக்தி பாடலுக்கு அடிமையான பப்பியா முதலை குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..
கோவிலில் யானை வளர்த்து பார்த்திருப்போம்..! காளை வளர்த்து பார்த்திருப்போம்..! ஏன் குரங்கு வளர்த்து கூட பார்த்திருப்போம்..! முதலை வளர்த்து பார்த்திருக்கிறீர்களா ? கேரள மாநிலம் அனந்தபுரத்தில் உள்ள ஒரு கோவிலில் முதலை ஒன்றை பல ஆண்டுகளாக வளர்த்து வருகின்றனர்.
கேரள மாநிலம் காசர்கோடு அடுத்த அனந்தபுரத்தில் பிரசித்தி பெற்ற அனந்தபத்மநாபசாமி கோவில் அமைந்துள்ளது. திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசாமி கோவிலின் மூலகோயிலாகக் கருதப்படும் இந்த கோவிலை சுற்றி அமைந்துள்ள பெரியகுளத்தில் ராட்சத முதலை ஒன்று வசித்து வருகிறது. ஆரம்ப காலத்தில் வெள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்ட இந்த முதலை தொடர்ந்து 80 ஆண்டுகளாக குளத்தில் வசித்து வருவதாக கூறப்படுவதால் இந்த கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் இதனை அதிசயமாக பார்த்துச் செல்கின்றனர்.
குளத்தில் இருந்து தலையை வெளியே காட்டும் போது கோவிலின் மேல் சாந்தி இந்த முதலைக்கு உணவாக சர்க்கரை பொங்கல் வழங்கி வருவதாகவும், பபியா என்று பெயரிட்டு அழைக்கப்படும் இந்த முதலை அவ்வப்போது நீருக்கு அடியில் உள்ள குகைப்பகுதியில் சென்று மறைந்து கொள்ளும் என்றும் கூறப்படுகின்றது.
இந்த நிலையில் கடந்த 20 ந்தேதி அதிகாலையில் கோவிலின் நடை திறக்கப்பட்ட நேரத்தில் குளத்திற்குள் இருந்த முதலை பபியா, முதன்முதலாக மெல்ல கோவிலுக்குள் நுழைந்து சன்னிதானத்தில் வலம் வந்ததாக கூறப்படுகின்றது. இதனை கண்ட கோவிலின் மேல் சாந்தி சுப்பிரமணிய பட் என்பவர் புருஷ சுத்தம் மற்றும் விஷ்ணு சுத்தம் ஆகிய பக்தி பாடல்களை பாடியதும் மெல்ல நகர்ந்து சென்ற முதலை மீண்டும் குளத்திற்குள் இறங்கிக் கொண்டது.
இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளை கோவில் நிர்வாகத்தினர் வெளியிட்டுள்ளனர். வழக்கமாக கோவிலின் நடை சாத்தப்பட்டதும் நீருக்குள் இருந்து வெளியில் வந்து கோவிலுக்கு காவல் போல நடையில் படுத்துக் கொள்ளும் முதலை பபியா, அதிகாலையில் பூஜை முடிந்ததும் குளத்திற்குள் சென்று விடுவது வழக்கம் என்று சுட்டிக்காட்டுகின்றனர்.
நாய் மட்டும் அல்ல எந்த ஒரு பிராணியாக இருந்தாலும் பசிக்கு உணவு கொடுத்து அன்பு காட்டி பராமரித்தால் அது சொல்பேச்சு கேட்கும் கிளிப்பிள்ளையாக மாறிவிடும் என்பதற்கு இந்த முதலையே சாட்சி..!
Comments