சொந்த காசில் சூனியம் வைத்தவர பார்த்திருக்கீங்களா..? பூஜை போட்ட சாமியார் ஓட்டம்

0 102629

நோயால் அவதிப்படும் குடும்பத்தினரை பில்லி சூனியத்தில் இருந்து காப்பாற்றுவதாக கூறிய போலி சாமியாரை நம்பி, தான் பிழைப்புக்கு ஓட்டிவந்த மினிவேனை விற்று 2 லட்சம் ரூபாய் கொடுத்து ஏமாந்துள்ளார் சென்னையை சேர்ந்த ஓட்டுனர் ஒருவர். சொந்த காசில் சூனியம் வைத்த கதையான சம்பவத்தின் பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.

தென்காசி மாவட்டம் செங்கோட்டை தாலுகா மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் ராஜகுமாரன். இவர் சொந்தமாக மகேந்திரா லோடு வேன் ஒன்றை வைத்து ஓட்டி பிழைப்பு நடத்தி வந்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு மீனாட்சிபுரத்தில் இருந்து புளியங்குடி சென்று கொண்டிருந்த போது சாலை ஓரத்தில் அமர்ந்திருந்த சாமியார் ஒருவரை பார்த்து அவரிடம் தனது குடும்பத்தை சேர்ந்த அனைவரும் அடிக்கடி ஏதாவது உடல் நிலை சரியில்லாமல் அவதிப்படுவதாக கூறி குறிகேட்டுள்ளார். அதற்கு அந்த சாமியாரோ தான் அவர்களை நேரில் பார்த்தால் தான் சொல்லமுடியும் என்று கூற அவரை வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு சென்ற அந்த சாமியார் உங்கள் குடும்பத்திற்கு பில்லி சூனியம் வைத்துள்ளதாகவும், உடனடியாக அதனை எடுக்க பூஜை நடத்த வேண்டும் என்று கூறியதோடு, இந்த பூஜைக்கு 2 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 2 சேவல் கோழிகளை எடுத்துக் கொண்டு சென்னைக்கு வருமாறும் கூறியுள்ளார்.

சாமியாரின் பேச்சை உண்மை என்று நம்பிய ஓட்டுனர் ராஜகுமாரன், சாமியாருக்கு பனம் கொடுக்க தனது பிழைப்புக்காக ஓட்டி வந்த மினிவேனை 5 லட்சம் ரூபாய்க்கு விற்றுவிட்டு, தனது உறவினர் லாசர் என்பவருடன் புளியங்குடியில் இருந்து காரில் சென்னை வந்துள்ளார்.

சென்னை ஸ்டான்லி மருத்துவமனை அருகே அந்த சாமியாரை பார்த்து 2 லட்சம் ரூபாய் பணத்தையும், 2 கோழிகளையும் கொடுத்துள்ளார். உடனடியாக அதை பெற்று கொண்ட சாமியார் பூஜை பொருட்கள் வாங்கி வருவதாக கூறி சென்றவர் நீண்ட நேரமாகியும் திரும்பி வரவேயில்லை. அப்போதுதான் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ராஜகுமாரன், சாமியாரை நம்பி தனது லோடு வேனை விற்று சொந்த காசில் சூனியம் வைத்துக் கொண்ட சம்பவம் தொடர்பாக வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகார் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அரசு ஸ்டான்லி மருத்துவமனை நுழைவு வாயில் அருகே பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமிரா காட்சிகளை கைப்பற்றினர். அதில் போலி சாமியார் கோழிகளை வாங்கிச்செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தன.

அதனை வைத்து மோசடியில் ஈடுபட்டது போலிசாமியார் யுவராஜ் என்பதை கண்டறிந்த கொருக்குப்பேட்டை காவல் ஆய்வாளர் பென்சாம் தலைமையிலான தனிப்படையினர், சாமியார் பயன்படுத்திய செல்போன் எண்ணைக் கொண்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

இந்த நிலையில் போலி சாமியார் யுவராஜ், ஒருவருடன் நீண்ட நேரம் செல்போனில் பேசி இருந்தான். அந்த செல்போன் எண்ணை வைத்து, யுவராஜ் வேளச்சேரியில் பதுங்கி புதிதாக அவருக்கு பில்லி சூனியம் எடுக்க பூஜை செய்ய இருப்பதை கண்டறிந்தனர்.

உடனடியாக அங்கு விரைந்த தனிப்படை போலீசார் பில்லி சூனியம் பூஜைக்கு தயாராக இருந்த யுவராஜ் கும்பலை சுற்றிவளைத்தனர். போலீசாரை கண்டதும் யுவராஜ் காரில் தப்பிசென்றுவிட்டான். அவனது காதலி ஜெயந்தி, காசிமேடு பாப்பா, அரக்கோணம் சுரேஷ், மதுரை அமர்நாத், ஆகியோரை சுற்றி வளைத்து போலீசார் கைது செய்தனர்.

போலிச்சாமியார் யுவராஜ் தலைமையிலான இந்த மோசடிக் கும்பல் தமிழகம் முழுவதும் சுற்றி வந்து கைவரிசை காட்டியுள்ளது. அவர்களிடம் இருந்து 30,000 ஆயிரம் ரூபாய் மற்றும் இரண்டு சேவலையும் போலீசார் பறிமுதல் செய்தனர். கைதான 4 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தப்பி ஓடி தலைமறைவாக உள்ள யுவராஜை வலைவீசி தேடிவருகின்றனர்.

நோய் என்றால் மருத்துவரை சென்று பார்ப்பதை விட்டு வீட்டில் பில்லி சூனியம் இருப்பதாக யாராவது அளக்கும் கதையை நம்பி, தங்கள் சொந்த பொருளை விற்று போலி சாமியார்களுக்கு பணம் கொடுப்பது சொந்தகாசில் சூனியம் வைத்துக் கொள்வதற்கு சமம்..! என்று எச்சரிக்கின்றனர் காவல்துறையினர்..

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments