EMI விவகாரம்: வட்டிக்கு வட்டித் தள்ளுபடி முறையாக செலுத்தியோருக்கு ஊக்கத்தொகை.!

0 51009
கொரோனா ஊரடங்கு காலத்தில், 6 மாதங்களுக்கு கடன் ஒத்திவைப்பு சலுகையை பெற்றவர்களுக்கு வட்டிக்கு வட்டி தள்ளுபடி செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

கொரோனா ஊரடங்கு காலத்தில், 6 மாதங்களுக்கு கடன் ஒத்திவைப்பு சலுகையை பெற்றவர்களுக்கு வட்டிக்கு வட்டி தள்ளுபடி செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இஎம்ஐ தள்ளிவைப்பு காலத்தில், வழக்கம்போல், முறையாக கடன் தவணை செலுத்தியவர்களுக்கும் சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

கொரோனா பரவலை அடுத்த கடந்த மார்ச் முதல் ஆகஸ்ட் வரை, 6 மாதங்களுக்கு, EMI எனப்படும், மாத கடன் தவணைகளை செலுத்த, இந்திய ரிசர்வ் வங்கி கால அவகாசம் அளித்தது. ஆனால், கடன் தவணைகள் ஒத்திவைக்கப்பட்ட 6 மாத காலத்துக்கு வங்கிகள், நிதி நிறுவனங்கள் உள்ளிட்டவை வட்டிக்கு வட்டி விதித்தன. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில், உச்சநீதிமன்றத்தில், ஒப்புக் கொண்டபடி, இ.எம்.ஐ மீதான கூட்டு வட்டியை தள்ளுபடி செய்வது தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி, 2 கோடி ரூபாய் வரை கடன் பெற்றவர்கள் பயன்பெறுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

தேசிய மற்றும் தனியார் உட்பட அனைத்து வங்கிகள், அனைத்து மாநில கூட்டுறவு வங்கிகள், மைக்ரோ பைனான்ஸ் உள்ளிட்ட நிதி நிறுவனங்கள், அனைத்து வீட்டுக்கடன் நிறுவனங்கள் ஆகியனவற்றில், கடன் பெற்றவர்களுக்கு, கடன் மீதான வட்டிக்கு வட்டி தள்ளுபடி செய்யப்படுவதாக, மத்திய அரசு அறிவித்துள்ளது.

சிறு-குறு தொழில்களுக்கான கடன், கல்விக்கடன், வீட்டுக்கடன், வாகன கடன், தனிநபர் கடன், கிரெடிட் கார்டு கடன், பொருட்கள் மீதான கடன், நுகர்வு கடன் ஆகிய வகைகளில், கடன் பெற்ற பயனாளிகளுக்கு மார்ச் 1 முதல் ஆகஸ்ட் 31 வரையிலான காலக்கட்டத்தில், வட்டிக்கு வட்டி வசூலிக்கும் கூட்டு வட்டி முறை தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில், கடன் தவணையை செலுத்த சலுகை வழங்கப்பட்ட காலத்தில், முறையாக கடன் தவணை செலுத்தியவர்களுக்கு, Cash Back என்ற அடிப்படையில், அவர்கள் செலுத்திய வட்டியில், குறிப்பிட்ட ஒரு தொகை, வங்கிக் கணக்கில், வரவு வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, 6 மாத தவணை செலுத்தியவர்களுக்கு, குறிப்பிட்ட காலத்திற்கான சாதாரண மற்றும் கூட்டு வட்டிக்கு இடையிலான வித்தியாசத்தை கணக்கிட்டு ஊக்கத் தொகையாக வழங்க வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

2 கோடி ரூபாய்க்கும் அதிகமாக கடன் பெற்றவர்கள், 6 மாத கடன் தள்ளி வைப்பு காலத்திற்கான, கூட்டு வட்டி தள்ளுபடி சலுகையை பெற முடியாது என்றும், மத்திய அரசு தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments