வழக்கறிஞர் மீது கொலைவெறி தாக்குதல்..! கடையின் ஷட்டரை சாத்தி கொடுமை

0 15486
தனியார் நிறுவனங்களின் குறைகளை கண்டறிந்து, நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இழப்பீடாக பணம் வசூலித்து வந்த வழக்கறிஞரை அடித்து உதைத்து தரையில் உட்கார வைத்த சம்பவம் நெல்லையில் அரங்கேறி உள்ளது.

தனியார் நிறுவனங்களின் குறைகளை கண்டறிந்து, நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இழப்பீடாக பணம் வசூலித்து வந்த வழக்கறிஞரை அடித்து உதைத்து தரையில் உட்கார வைத்த சம்பவம் நெல்லையில் அரங்கேறி உள்ளது.

நெல்லை மாநகராட்சி அதிகாரிகளின் முறைகேடுகளை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் வெளிக்கொண்டு வருவதாக கூறி, தகவல்களை பெற்று நுகர்வோர் நலன் தொடர்பாக நீதிமன்றத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகளை தாக்கல் செய்துள்ளவர் வழக்கறிஞர் பிரம்மா என்கிற பிரம்ம நாயகம்.

நெல்லையில் 4 கிளைகளை கொண்ட மதுரம் ஓட்டல், நெல்லை சரவணபவன், ஆப்பிள் ட்ரீ, டாஸ்மாக் கடைகள், கனரா வங்கி, ரிலையன்ஸ் மார்க்கெட், பாம்பே தியேட்டர், பேரின்பவிலாஸ் தியேட்டர், ஸ்ரீரத்னா தியேட்டர், பூர்ணகலா தியேட்டர், அருணகிரி தியேட்டர், ராம் முத்துராம் சினிமாஸ், சீத்தாபதி, லயன், பிடி.சண்முகம் , ஆண்ட்ரூஸ் என தனியார் நிறுவனங்கள் உள்ளிட்டவை மீது மட்டும் கடந்த 4 வருடங்களில் குறிப்பிட்ட 15 நபர்களை வைத்து சேவை குறைபாடு என நுகர்வோர் நீதி மன்றத்தில் 150க்கும் மேற்பட்ட வழக்குகளை வழக்கறிஞர் பிரம்மா தொடுத்துள்ளார்.

அவர்களிடம் 15 ஆயிரம் ரூபாய் முதல் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை இழப்பீடாக பணம் வசூல் செய்து கொண்டு வழக்கை திரும்ப பெற்றதாக கூறப்படுகின்றது.

ஒரே நேரத்தில் 5 பேர் மூலம் நோட்டீஸ் அனுப்பி சம்பந்தப்பட்ட வணிக நிறுவனங்களை கலங்கடித்து வந்த வழக்கறிஞர் பிரம்மா
மீது ஏராளமான வியாபார பிரமுகர்கள் ஆத்திரத்தில் இருந்துள்ளனர்.

இந்த நிலையில் சம்பவத்தன்று மதுரம் என்ற ஓட்டலுக்கு மீண்டும் சாப்பிட்ட சென்ற வழக்கறிஞர் பிரம்மா பணம் செலுத்திவிட்டு, அதற்குரிய பில்லை தன்னிடம் தருமாறு கேட்டுள்ளார்.

ஏற்கனவே அந்த ஓட்டல் மீது பிரம்மா ஏராளமான வழக்குகள் தொடர்ந்துள்ளதால் ஆத்திரத்தில் இருந்த ஓட்டல் பங்குதாரர்களில் ஒருவரான ஹரிஅய்யர் என்பவர், பில்லை கொடுக்க மறுத்ததோடு, கடையின் ஷட்டரைப் பூட்டிவிட்டு, கடையில் பணிபுரியும் ஊழியர்களுடன் சேர்ந்து வழக்கறிஞர் பிரம்மாவை சரமாரியாக அடித்து உதைத்து உட்காரவைத்ததாக கூறப்படுகின்றது.

தகவல் அறிந்து அங்கு திரண்ட வழக்கறிஞர்கள் ஆவேசமாக முற்றுகை போராட்டம் நடத்தியுள்ளனர். ஓட்டல் மீது கற்களும் வீசப்பட்டது.

சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர் ஹரிஅய்யர் உள்ளிட்ட 8 பேரை விசாரணைக்காக அழைத்துச் சென்று கொலை முயற்சி வழக்கில் கைது செய்தனர்.

கடந்த சில ஆண்டுகளில் கட்டிட விதிமுறைமீறல், முறையான பார்க்கிங் வசதி இல்லாதது, தரமற்ற உணவு வழங்கியது, அதிக விலைக்கு உணவை விற்றது , உணவகத்தில் ஏசி வேலை செய்யாதது என 4 மதுரம் ஓட்டல்களின் மீதும் வழக்கறிஞர் பிரம்மா நுகர்வோர் நீதிமன்றத்தில் 90க்கும் மேற்பட்ட வழக்குகளை தொடர்ந்ததாகவும், இந்த வழக்குகளில் சமாதானமாக செல்வதற்கு வழக்கிற்கு தலா 15 ஆயிரம் ரூபாய் வரை தங்களிடம் இழப்பீடாக பெற்றதாக தெரிவித்துள்ள ஓட்டல் நிர்வாகத்தினர் , தற்போது கொரோனாவுக்கு உணவு வழங்கியதில் முறைகேடு என புதிதாக வழக்கு போட்டு பணம் பறிக்கும் நோக்கத்தில் வழக்கறிஞர் பிரம்மா சாப்பிட்ட பில்லை கேட்டு தகராறு செய்ததால் தாக்கியதாக ஓட்டல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் மதுரம் ஓட்டலில் இருந்து கொரோனா காலத்தில் அரசு மருத்துவர்களுக்கு அதிக விலைக்கு உணவு வழங்கப்பட்டதாக எழுந்த புகாருக்கு உரிய ஆதாரத்தை தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் மாநகராட்சி அதிகாரிகளிடம் இருந்து சேகரித்ததை ஒப்புக் கொண்ட வழக்கறிஞர் பிரம்மா, எந்த ஒரு உள் நோக்கமும் இன்றி தான் கொடுத்த பணத்துக்கு உரிய பில்லை ஓட்டல் நிர்வாகத்திடம் கேட்டதாகவும், அவர்கள் உள்னோக்கத்துடன் தன்னை தாக்கியதாகவும் பிரம்மா தெரிவித்துள்ளார்.

இதனிடையே வழக்கறிஞர் பிரம்மா மீதும் வன்கொடுமை தடுப்புச்சட்டம் உட்பட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவத்தன்று கடைக்கு வந்த பிரம்மா முதலில் கடை ஊழியர் பொன்னரசு என்பவரை ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டதன் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments