ஆயுத பூஜையை முன்னிட்டு, பல மடங்கு அதிகரித்த பூக்களின் விலை
ஆயுத பூஜையை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பூஜைப்பொருட்கள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், பல்வேறு இடங்களில் பூக்களின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது.
சென்னையில் ஆயுத பூஜையை முன்னிட்டு பூஜைப்பொருட்கள், அலங்கார தோரணங்கள், பூக்கள், பழங்கள் விற்பனை களைகட்டியது. கோயம்பேடு, பிராட்வே, மயிலாப்பூர் உள்ளிட்ட இடங்களில் மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வானகரத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பூ சந்தையில், பூக்களின் விலை இருமடங்கு உயர்ந்துள்ளது.
நெல்லையில் மல்லிகை மற்றும் கனகாம்பரம் அதிகபட்சமாக கிலோ ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது. பூஜை பொருட்களின் விலையும் இருமடங்கு அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில், கதம்பமாலை கட்டுவதற்கான பூக்களின் விலை உயர்ந்து, கிலோ 50 ரூபாய்க்கு விற்கபட்ட அரளி 400 ரூபாய்க்கும், செண்டுமல்லி 150 ரூபாய்க்கும், கோழிக்கொண்டை 120 ரூபாய்க்கும் விற்பனையானது.
தேனியில் 20 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ சாமந்தி, 400 ரூபாய்க்கும் 300 ரூபாய்க்கு விற்கப்பட்ட மல்லிகைப்பூ 700 ரூபாய்க்கும், 60 ரூபாய்க்கு விற்கப்பட்ட செவ்வந்தி, ரோஸ், வெள்ளை செவ்வந்தி உள்ளிட்டவை 350 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
ஆயுதபூஜை முன்னிட்டு தொழில் நகரமான திருப்பூரில் உள்ள சந்தைகளில் மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. பூ, தேங்காய், பழங்கள், வாழைகன்றுகள், பொரி, அலங்கார தோரணங்கள் ஆகியவற்றை வாங்க காலையிலிருந்தே மக்கள் அதிக ஆர்வம் காட்டினர்.
சேலம், நாமக்கல், திருவண்ணாமலை, ஆரணி, திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, நாகை மாவட்டம் வேதாரண்யம், கரூர் உள்ளிட்ட இடங்களில் பூஜைப்பொருட்கள், பூக்கள், பழங்கள் விற்பனை விறுவிறுப்புடன் நடைபெற்றது.
அதே சமயம், சென்னை தாம்பரம், பூவிருந்தவல்லி, திருச்சி, ஈரோடு உள்ளிட்ட இடங்களில் வழக்கமான பரபரப்பின்றி ஆயுதப்பூஜை பொருட்கள் விற்பனை மந்தமான நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
Comments