5-வது முயற்சியில் அபார வெற்றி... அமைச்சர் ஜெயக்குமாரின் விடா முயற்சி
ராயபுரத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்ற அமைச்சர் ஜெயக்குமார், தெருவோர சிறுவர்களிடம் சிறிது நேரம் கேரம் விளையாடியதோடு, அவர்களுக்கு அறிவுரையும் கூறினார்.
தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க கட்சியின் முக்கிய தலைவர்களில் அமைச்சர் ஜெயக்குமாரும் ஒருவர். மீன்வளத்துறை அமைச்சரான ஜெயக்குமாரின் உழைப்பால்தான் ராயபுரம் தொகுதியின் அ.தி.மு.க கோட்டையாக உள்ளது . அ.தி.மு.க வின் அரசியல் எதிரிகளுக்கும் ஜெயக்குமார் வழியாகத்தான் அந்த கட்சி அதிரடியாக பதிலடி கொடுக்கும். சமீபத்தில் தமிழக அரசை விமர்சித்த நடிகர் கமல்ஹாசனை பிக் பாஸ்' போல வீட்டுக்குள் இருந்தபடி அரசை விமர்சனம் செய்கிறார்" என்று ஜெயக்குமார் அதிரடியாக பதிலடி கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசியல் எதிரிகளை அதிரடியாக சிதறடிக்கும் அமைச்சர் ஜெயக்குமார் சற்று வித்தியாசமானவரும் கூட . மக்கள் பணிகள் மேற்கொள்ளும் சமயத்தில் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடுவதை பார்த்தால், அவரும் குழந்தையாக மாறி கிரிக்கெட் விளையாடத் தொடங்கி விடுவார். சமீபத்தில் , அமைச்சர் ஜெயக்குமார் ராயபுரம் சட்டமன்றத் தொகுதியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்று கொண்டிருந்தார்.
அப்போது, தெருவோரம் சிறுவர்கள் சிலர் கேரம் விளையாட்டிக் கொண்டிருந்தனர். இதை பார்த்த ஜெயக்குமாரும் உற்சாகமாகி, சிறுவர்களுடன் அமர்ந்து கேரம் விளையாடத் தொடங்கி விட்டார். விடாமல் பல முறை போராடிய ஜெயக்குமார் 5- வது முயற்சியில் ஒரு காயினை அடித்தும் காட்டினார். பிறகு, சிறுவர்களிடம் விடாமுயற்சி எப்போதுமே வெற்றியை கொடுக்கும் , எந்த விஷயத்திலும் முயற்சியை கை விட்டு விடாதீர்கள் என்று அறிவுரை கூறி விட்டு கிளம்பி சென்றார். தங்களுடன் அமர்ந்து அமைச்சர் கேரம் விளையாடி சென்றதால், சிறுவர்களும் அளவு கடந்த மகிழ்ச்சியடைந்தனர்.
Comments