கண்டெய்னர் லாரியில் கடத்தப்பட்ட 5.5 டன் குட்கா பறிமுதல் சேசிங் செய்து மடக்கிய போலீசார்
பெங்களூரில் இருந்து சென்னைக்கு கண்டெய்னர் லாரியில் கடத்தி வரப்பட்ட ஐந்தரை டன் (5.5 டன்) குட்கா போதைப் பொருளை தனிப்படை போலீசார் சேஸிங் செய்து பறிமுதல் செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட 3 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மாதந்தோறும் 75 டன் குட்காவை கடத்தி வந்தது அம்பலமாகியுள்ளது.
சென்னை கோட்டூபுரத்தில் கடைகளுக்கு தடை செய்யப்பட்ட குட்கா போதைப் பொருளை சப்ளை செய்த புருசோத்தமன் என்பவரை கடந்த மாதம் 250 கிலோ குட்காவுடன் போலீசார் மடக்கினர்.
விசாரணையில் பெங்களூரிலிருந்து கண்டெய்னர் லாரிகளில் குட்கா கடத்தி வரப்பட்டு விற்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து தனிப்படை அமைத்து தமிழக - கர்நாடக எல்லையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
குட்கா கடத்தலுக்கு பயன்படுத்தப்படும் கண்டெய்னர் லாரியின் பதிவெண் கிடைக்கவே, அதை கொண்டு கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்ட நிலையில், பெங்களூரிலிருந்து கடத்தல் லாரி வந்தது.
இதையடுத்து அந்த லாரியை போலீசார் பின்தொடரவே, அதை அறியாமல் லாரியிலிருந்த நபர்கள், ஸ்ரீபெரும்புதூர் அருகே நிறுத்திவிட்டு சிறிய சரக்கு வாகனங்களில் குட்காவை மாற்றியுள்ளனர்.
பின்னர் சென்னைக்கு விநியோகிக்க அங்கிருந்து அவர்கள் புறப்பட தயாரானபோது, தனிப்படை போலீசார் சுற்றி வளைத்தனர்.
பெங்களூரிலிருந்து கடத்தி வரப்பட்ட 45 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஐந்தரை டன் குட்காவை பறிமுதல் செய்ததோடு , லாரியிலிருந்த விருதுநகர் மாவட்டம் காளையார்குறிச்சியைச் சேர்ந்த ஓட்டுநர் முத்துராஜ், விழுப்புரம் மாவட்டம் கண்ணன்காட்டை சேர்ந்த சிவராஜ், திருவண்ணாமலை மாவட்டம் செல்லங்குப்பத்தைச் சேர்ந்த அரவிந்ததை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில், 3 கண்டெய்னர்களில் ஒவ்வொரு மாதமும் 75 டன் குட்காவை பெங்களூரிலிருந்து சென்னைக்கு கடத்தி வந்ததாக தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் குட்கா மீது தடை இருந்தபோதிலும், சென்னையில் பரவலாக அனைத்து கடைகளிலும் அவை விற்பனை செய்யப்பட இக்கும்பலே காரணமென குற்றம்சாட்டும் போலீசார், கடத்தல் கும்பலுக்கு மூளையாக செயல்பட்ட செந்தில் என்ற கனகலிங்கத்தையும், அவரது கூட்டாளி முனியப்பனையும் தேடி வருகின்றனர்.
Comments