உதவி செய்த திருநங்கையின்.. உயிரைப் பறித்த இளைஞன்
கோவையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு பிளாஸ்டிக் டிரம்முக்குள் இருந்து சடலமாக திருநங்கை மீட்கப்பட்ட சம்பவத்தில் இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான். பரிதாபப்பட்டு தனக்கு வேலை கொடுத்த திருநங்கைக்கு பாலியல் தொல்லை அளித்த அந்த இளைஞன், திருநங்கை எதிர்ப்பு தெரிவித்ததால் அவரை கொலை செய்தது தெரியவந்துள்ளது.
கோவை சாய்பாபா காலணியைச் சேர்ந்த திருநங்கை சங்கீதாவின் அழுகிய சடலம் கடந்த புதன்கிழமை அவரது வீட்டிலுள்ள பிளாஸ்டிக் டிரம்மில் இருந்து கழுத்து அறுபட்ட நிலையில் மீட்கப்பட்டது. உடல் அழுகி துர்நாற்றம் வீசாமல் இருக்க அதன் மீது உப்பும் கொட்டப்பட்டு இருந்தது. தனிப்படை அமைத்து தீவிர விசாரணையில் இறங்கிய போலீசார், நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடியைச் சேர்ந்த ராஜேஷ் என்ற 23 வயது இளைஞனை கைது செய்தனர்.
வசதியான பின்னணி கொண்ட குடும்பத்தில் பிறந்த திருநங்கை சங்கீதா, அவர் திருநங்கை என அறியப்பட்ட நாளில் வீட்டை விட்டு விரப்பட்டார் என்று கூறப்படுகிறது. எல்லா திருநங்கைகளைப் போலவே பெரும் போராட்டங்களுக்கு இடையே புதிய வாழ்க்கையை தொடங்கிய திருநங்கை சங்கீதா, சக திருநங்கைகளின் முன்னேற்றத்துக்காக பல்வேறு சமூகப் பணிகளை மேற்கொண்டு வந்துள்ளார்.
அதனடிப்படையில் கோவை மாவட்ட திருநங்கைகள் சங்கத் தலைவராக விளங்கிய சங்கீதா, கொரோனா ஊரங்டங்கின்போது பல்வேறு இடங்களில் நிதி திரட்டி, ஆர்.எஸ்.புரம் பகுதியில் `டிரான்ஸ் கிச்சன்’ என்ற உணவகத்தைத் தொடங்கினார். முழுக்க திருநங்கைகளைக் கொண்டு இயங்கிய அந்த உணவகத்துக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
`டிரான்ஸ் கிச்சன்’ உணவகம் குறித்து யூடியூப் மூலம் அறிந்த ராஜேஷ், திருநங்கை சங்கீதாவை போனில் அழைத்து தாம் ஐடிஐ படித்துவிட்டு வேலை தேடி வருவதாகவும் உங்களது உணவகத்தில் வேலை வேண்டும் என்றும் கேட்டிருக்கிறான். ராஜேஷ் மீது பரிதாபப்பட்டு கடந்த மாதம் வேலைக்குச் சேர்த்துக்கொண்ட திருநங்கை சங்கீதா, தங்குவதற்கு இடமின்றி தவித்த அவனுக்கு தனது வீட்டிலேயே இடமும் கொடுத்திருக்கிறார்.
இந்த நிலையில்தான் கடந்த சில தினங்களாக திருநங்கை சங்கீதாவுக்கு ராஜேஷ் பாலியல் தொல்லை கொடுக்கத் தொடங்கியிருக்கிறான் என போலீசார் கூறுகின்றனர். சம்பவத்தன்றும் தாம் திருநங்கை சங்கீதாவிடம் தவறாக நடக்க முயன்றதாகவும் அதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்தோடு போலீசிடம் சொல்லிவிடுவேன் என மிரட்டியதால் கழுத்தறுத்து கொலை செய்தாகக் கூறிய ராஜேஷ், வீட்டிலிருந்த 20 ஆயிரம் ரூபாய் பணத்தையும் எடுத்துக் கொண்டு தலைமறைவானதாக வாக்குமூலம் அளித்ததாக போலீசார் கூறுகின்றனர்.
”உப்பிட்டவரை உள்ளளவும் நினை” என்றொரு பழமொழி உண்டு. ஆனால் தனக்கு வேலை கொடுத்து இருக்க இடமும் கொடுத்த திருநங்கையை கொடூரமாகக் கொன்று, டிரம்முக்குள் அடைத்து உடலின் மீது உப்பைக் கொட்டிச் சென்ற ராஜேஷ் போன்ற கொடூரர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு....
Comments