பசுமை வீட்டில் சூதாட்ட கிளப்... கில்லாடி பயனாளியை சிக்க வைத்த இளைஞர்!
சங்கரன்கோவில் அருகே பசுமை வீட்டில் செயல்பட்டு வந்த சூதாட்ட கிளப்பை அதிரடியாக இளைஞர் ஒருவர் மூட வைத்துள்ளார்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள பனையடியான் கோவில் தெருவில் பசுமை வீடு திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீட்டில் கடந்த நான்கு வருடங்களாக நண்பர்கள் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் சூதாட்ட கிளப் இயங்கி வந்தது. இங்கு, சீட்டு விளையாடுவது உள்ளிட்டவற்றில் சிலர் ஈடுபட்டு வந்துள்ளனர். இதனால் , அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் பாதிக்கப்பட்டனர். பசுமை வீட்டை கட்டிய பயனாளி, வேறு ஒருவருக்கு வாடகைக்கு விட்டிருந்துள்ளார். அவர், இந்த வீட்டை சூதாட்ட கிளப்பாக மாற்றியுள்ளார்.
இது குறித்து, சமூக செயற்பாட்டாளரான சுரேஷ் என்பவர் வட்டார மாவட்ட துணை ஆட்சியருக்கு புகாரளித்தார். உடனடியாக, அங்கு வந்த அதிகாரிகள் பசுமை வீட்டில் இயங்கிய சூதாட்ட கிளப்பை மூடினர். வீட்டின் முன் பொருத்தப்பட்டிருந்த மனமகிழ் மன்றம் என்ற பலகையும் அகற்றப்பட்டது. பசுமை வீடு பயனாளியான முருகன் என்பவர் வேறு ஒருவருக்கு தனது வீட்டை வாடகைக்கு விட்டுள்ளார்
இதையடுத்து சூதாட்டம் நடைபெற்றதால் பயனாளி முருகனிடத்திலிருந்து மானியத் தொகை மற்றும் 12 சதவிகித வட்டியுடன் வசூலிக்க உத்தரவிடப்பட்டள்ளது. இதனால், முருகன் ரூ. 2,20,000 வரை கட்ட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். சூதாட்ட கிளப் மூடப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். சூதாட்ட கிளப்பை மூடுவதற்கு முயற்சி எடுத்த சமூக செயற்பாட்டாளர் சுரேஷை பொதுமக்கள் பாராட்டினர்.
Comments