ரூ.15 கோடி செல்போன்கள் கொள்ளை : மத்தியப் பிரதேசத்திற்கு விரைந்தது தமிழக போலீஸ்.!

0 5684

கிருஷ்ணகிரியில் கண்டெய்னர் லாரியை மறித்து 15 கோடி ரூபாய் மதிப்புடைய செல்போன்களை கொள்ளையடித்த கும்பலைத் தேடி, மத்திய பிரதேச மாநிலத்திற்கு, தமிழக போலீசார் விரைந்துள்ளனர். 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, பல்வேறு கோணங்களில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வரும் செல்போன் தயாரிப்பு தொழிற்சாலையில், இருந்து வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்லப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள ஸ்மார்ட் போன்கள், ஒரே மாதத்தில் 2ஆவது முறையாக கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

செல்போன்களை ஏற்றிச் செல்லும் கண்டெய்னர் லாரியை, கார்கள், பைக்குகளில் பின்தொடரும் கொள்ளை கும்பல், ஆள்அரவமற்ற பகுதியில், யாருக்கும் சந்தேகம் வராத வகையில் வழிமறித்து, ஓட்டுநர்களை தாக்கி, செல்போன்களை, கொள்ளையடித்துச் செல்கிறது.

இந்த வகையில், ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வரும் ரெட்மி செல்போன் நிறுவனத்தில் இருந்து, சீலிடப்பட்ட கண்டெய்னர் லாரி மூலமாக, 14 ஆயிரத்து 340 செல்போன்கள், மும்பைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. 2 ஓட்டுநர்களுடன், செவ்வாய்க்கிழமை இரவு புறப்பட்ட லாரி, புதன்கிழமை அதிகாலை 1 மணியளவில் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் மேலுமலை என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தது.

அப்போது, மற்றொரு கண்டெய்னர் லாரியில் வந்த 8 பேர் கொள்ளை கும்பல், திடீரென தங்கள் லாரி மூலம் ஓவர்டேக் செய்து, செல்போன் லாரிக்கு முன்னால் வந்து நிறுத்தி வழிமறித்துள்ளனர். பின்னர், 2 ஓட்டுநர்களையும், கைகளால் சரமாரியாகத் தாக்கிய கொள்ளை கும்பல், இருவரது கை-கால்களையும் கயிற்றால் கட்டியதோடு, வாயில் துணியை வைத்து கட்டிபோட்டுவிட்டு, அவர்களோடு, லாரியையும் ஓட்டிச் சென்றுள்ளது.

சம்பவ இடத்தில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அழகுபதி என்ற இடத்தில், 2 கண்டெய்னர் லாரிகளையும், எதிர்எதிர் திசையில், பின்புறமாக நிறுத்தி, கண்டெய்னர் லாரியில் இருந்த செல்போன்களை, தாங்கள் கொண்டு வந்திருந்த கண்டெய்னர் லாரிக்கு மாற்றியதாக சொல்லப்படுகிறது.

இதையடுத்து, 2 ஓட்டுநர்களை கீழே தள்ளிவிட்டதோடு, செல்போன் லாரியையும் அப்படியே விட்டுவிட்டு, கொள்ளையர்கள் தங்கள் லாரியில் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. ஒரு பாக்சில் 956 செல்போன்கள் வீதம், 15 பெட்டிகளில், 14,340 செல்போன்கள் இருந்துள்ளன. இவற்றின் மதிப்பு, சுமார் 15 கோடி ரூபாய் ஆகும் என நிறுவனம் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments