ஜல்லிக்கட்டு காளை சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர்
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டின் பெருமையை எடுத்துரைக்கும் வகையில், ஜல்லிக்கட்டு காளை சிலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் வேலூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் செயல்பட்டு வரும் ஐ.டி.சி. நிறுவனத்தில் 100கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்ட கோதுமை மாவு உற்பத்தி செய்யும் யூனிட்டை திறந்து வைத்தார்.
பின்னர், பேசிய முதலமைச்சர் 2020 ஆம் ஆண்டில் முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாகவும், நடப்பாண்டில் 820 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது என்றும் பெருமிதம் தெரிவித்தார்.
தொடர்ந்து, விராலிமலை சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அங்கு சீறிவரும் காளையை வீரர் அடக்க முயல்வது போன்ற சிலையை திறந்து வைத்தார்.
கடந்த 2019-ல் விராலிமலையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி கின்னஸ் சாதனை படைத்தது. இதன் நினைவாக, காமராஜர் நகரில் உள்ள ரவுண்டானாவில் 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இந்த சிலை அமைக்கப்பட்டது.
இதனையடுத்து, கவிநாடு பகுதியில் 61 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் நடந்து முடிந்த குடிமராமத்து பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார். தொடர்ந்து, காவிரி வைகை குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு முதற்கட்டமாக 700 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ததற்கு, விவசாயிகள் 500-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டியில் வந்து முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.
200-க்கும் மேற்பட்ட விவசாய பெண்களும் முளைப்பாரி எடுத்து வந்து நன்றி தெரிவித்தனர். பின்னர், மாட்டு வண்டியில் ஏறி நின்று விவசாயிகளோடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடினார்.
முன்னதாக, இலுப்பூரில் ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காளைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார்.
அதனைத் தொடர்ந்து விவசாயிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் பேசிய முதலமைச்சர், வரும் ஜனவரி மாதம் காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்படும் என்று அறிவித்தார். இதனால் கரூர், புதுக்கோட்டையில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று தெரிவித்தார்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களால், விவசாயிகளுக்கு நன்மையே என்று விளக்கம் அளித்த முதலமைச்சர், தமிழக அரசு மீது சில அமைப்புகள் வேண்டுமென்றே குற்றம்சாட்டுவது வேதனை அளிப்பதாக கூறினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கொரோனா தடுப்பூசி மருந்து கண்டுபிடிக்கப்பட்டவுடன் தமிழக மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்தார்.
தொழில் முதலீடு ஈர்ப்பு மற்றும் ஒப்பந்தங்கள் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தவறான தகவல்களை தெரிவிப்பதாக கூறிய முதலமைச்சர்,தொழில் முனைவோர்கள் தமிழகம் நோக்கி வந்த வண்ணமே உள்ளனர் என்று குறிப்பிட்டார்.
Comments