கஞ்சா விற்ற காவலர் கைது
சென்னையில் கஞ்சா கும்பலை பிடிக்க "ட்ரைவ் அசைன்ஸ்ட் ட்ரக்" எனும் திட்டத்துடன் காவல் துறையினர் களமிறங்கியுள்ள நிலையில், ஆயுதப்படை காவலர் ஒருவரே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு கைதாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தலைமைச் செயலகம் அருகே அன்னை சத்யா நகரில், ரோந்து போலீசாரிடம் கஞ்சா போதையில் சிக்கிய இளைஞர்கள் ஜீவா மற்றும் பாலமுருகனிடம் விசாரித்ததில், மயிலாப்பூரைச் சேர்ந்த பிரேம்குமார் மற்றும் ஆயுதப்படை காவலர் அருண்பிரசாத் ஆகியோர் மூலம் கஞ்சா கிடைத்ததாக தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து பிரேம்குமாரையும், அருண்பிரசாத்தையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
தர்மபுரியை சேர்ந்த அருண் பிரசாத் 2017முதல் சென்னை புதுப்பேட்டையில் ஆயுதப்படை காவலராகப் பணிபுரிந்து வந்துள்ளார். தலைமைச் செயலக பகுதியில் பணியில் இருந்தபோது ஜீவா, பாலமுருகனுடன் பழக்கம் ஏற்பட்டு அவர்கள் மூலம் கஞ்சா கிடைக்கும் இடத்தைத் தெரிந்து கொண்டவர் கஞ்சாவுக்கு அடிமையாகியதோடு, கஞ்சா சப்ளையரான ஆட்டோ ஓட்டுநர் ரமேஷிடம் நேரடி தொடர்பு வைத்து கஞ்சா விற்பனை செய்துள்ளதாக விசாரணையில் தெரிந்துள்ளது.
மேலும் கொரோனா தளர்வுக்குப் பின்னர் மீண்டும் விற்பனையைத் தொடங்கிய அருண்பிரசாத்துக்கு, ஆட்டோ ஓட்டுனர் ரமேஷ் ஆந்திராவிலிருந்து இருசக்கர வாகனம் மற்றும் ஆட்டோவின் மூலம் கஞ்சா கடத்தி வந்து சப்ளை செய்ததும் தெரிய வந்துள்ளது.
விசாரணையைத் தொடர்ந்து அருண் பிரசாத் தங்கியிருந்த புரசைவாக்கம் விடுதியில் சோதனை செய்த போலீசார் சிகரெட் வடிவிலான மூன்றரை கிலோ கஞ்சாவினை பறிமுதல் செய்ததாகத் தெரிவித்துள்ளனர்.
மேலும் கைது செய்யப்பட்ட பிரேம்குமார், காவலர் அருண் பிரசாத், ரமேஷ் ஆகியோர் நேற்றிரவு 11 மணி அளவில் சென்னை எழும்பூர் நீதிமன்ற நீதிபதி குடியிருப்பில் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். நவம்பர் 4 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டதை அடுத்து மூவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
Comments