டிடெக்டிவ்வான டியூசன் ஆசிரியர் திருடனை மடக்கினார்..! கொண்டையை மறந்த கொள்ளையன்

0 5763

டியூசன் சென்டருக்குள் புகுந்து செல்போன் மற்றும் பணத்தை திருடிச்சென்ற கொள்ளையனை டியூசன் ஆசிரியர் ஒருவர், ஜிபிஎஸ் உதவியுடன் துப்பறிந்து, திருடனை பின் தொடர்ந்து சென்று பிடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.  

புதுச்சேரி அரியாங்குப்பம் கடலூர் சாலையில் ஜோதி கல்வி மையம் என்ற பெயரில் டியூசன் செண்டர் நடத்திவருபவர் தமிழரசன். இவர் தனது டியூஷன் சென்டரின் அலுவலக அறையில் தனது செல்போனை சார்ஜ் போட்டுவிட்டு, பக்கத்துக்கு அறையில் மாணவர்களுக்கு பாடம் எடுத்து கொண்டிருந்தார்.

அப்போது மாணவர்களின் பெற்றோர் போல அலுவலகத்திற்குள் உள்ளே நுழைந்த மர்ம நபர் 25 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஒப்போ ஸ்மார்ட் போனையும், மேசையில் இருந்து 1700 ரூபாய் ரொக்க பணத்தையும் திருடிச் சென்றுள்ளார். தொடர்ந்து வகுப்புகளை முடித்துவிட்டு வந்த ஆசிரியர் தமிழரசன் செல்போன் மற்றும் பணம் களவுபோனதை அடுத்து தங்கள் நிறுவனத்தின் முன்புள்ள சிசிடிவியை ஆய்வு செய்துள்ளார்.

அதில் நீல வண்ண சட்டை அணிந்த மர்ம நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு தனது அலுவலகத்திற்கு வந்து விட்டு சிறிது நேரத்திலேயே வண்டியை எடுத்து செல்வதை பார்த்து விட்டு அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகார் கொடுத்துவிட்டு சும்மா இல்லாமல் தனது போனை தனது தம்பி போனில் உள்ள GPS யை கொண்டு கண்காணித்துள்ளார். அப்போது செல்போன் சுவிட்ஜ் ஆப் செய்து வைக்கப்பட்டிருந்ததால் அந்த செல்போன் இருக்கும் இடத்தை கண்டறிய முடியவில்லை.

மீண்டும் காலை GPS யை கொண்டு ஆய்வு செய்தபோது அந்த போன் கடலூர் பேருந்து நிலையம் அருகே இருப்பதாக காட்டியுள்ளது. உடனடியாக தமிழரசன் தனது தம்பியை அழைத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் கடலூர் சென்றார். கடலூர் பேருந்து நிலையம் அருகே சிக்னல் காட்டிய இடத்திற்கு சென்று தேடியுள்ளனர்.

அங்கு காத்திருந்தபோது சிசிடிவியில் பார்த்த அதே நீல வண்ண சட்டை அணிந்த நபர் அங்குள்ள கடை ஒன்றில் களவுபோன தனது செல்போனை சார்ஜில் போட்டு விட்டு அதன் அருகில் நிற்பதை கண்டனர். உடனடியாக அவனை பிடித்து விசாரித்ததில் அவன் செல்போனை திருடியதை ஒப்புக்கொண்டுள்ளான். இதனை அடுத்து கடலூர் போலீசாரிடம் தகவல் சொல்லி செல்போனை மீட்ட கையோடு திருடனை பிடித்து அரியாங்குப்பம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

விசாரணையில் அவன் சென்னையை சார்ந்த புருசோத்தமன் என்பதும் திருடுவதை தொழிலாக கொண்ட அவன் கடலூரில் விடுதியில் தங்கி, திறந்திருக்கும் வீடுகள், கடைகளை நோட்டமிட்டு கைவரிசை காட்டி வந்ததும் தெரிய வந்தது. மேலும் அவனிடம் இருந்து 10 க்கும் மேற்பட்ட செல்போன் மற்றும் கடிகாரங்கள் இருந்ததை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அவனை காவல்நிலையம் அழைத்து சென்றபோது சளி, இருமல் மற்றும் காய்ச்சல் இருந்ததால் கொரோனா பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த பரிசோதனையில் செல்போன் களவானிக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இதை தொடர்ந்து அவனை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

செல்போன் திருடு போய்விட்டது என்று போலீசாரிடம் புகார் கொடுத்தபிறகு சும்மா இருந்து விடாமல் களத்தில் தாங்களே இறங்கி GPS உதவியால் குற்றவாளியை பிடித்த டியூஷன் ஆசிரியர் தமிழரசனை போலீசார் பாராட்டினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments