மும்பை தாதா டு தேனீர் வியாபாரி... விருதாச்சலத்தில் அமைதியாக வாழும் ரியல் 'பாட்ஷா'
பாட்ஷா திரைப்படத்தில் மும்பையில் பிரபல தாதாவாக வலம் வரும் ரஜினிகாந்த், ஒரு கட்டத்தில் அமைதியான ஆட்டோ ஓட்டுநராக வாழ்வார். படத்தில் ரஜினியை போன்றே நிஜவாழ்க்கையில் தாதாகிரியில் ஈடுபட்ட மும்பை கண்ணதாசன் என்பவர் இப்போது விருதாச்சலத்தில் டீ விற்று பிழைப்பு நடத்தி வருகிறார்.
இந்தியாவின் பொருளாதாரத் தலைநகரான மும்பை தமிழகத்தை சேர்ந்த பல தாதாக்கள் வலம் வந்த நகரம். தூத்துக்குடியைச் சேர்ந்த வரதராஜ முதலியார், ராமநாதபுரம் ஹாஜி மஸ்தான் போன்றவர்கள் மும்பையில் கோலோச்சிய தமிழக தாதாக்கள். அந்த வகையில், தமிழகத்தை சேர்ந்த பல குட்டி தாதாக்களும் மும்பை நகரத்தில் வாழ்ந்தனர். அவர்களில் ஒருவர்தான் விருதாச்சலம் அருகேயுள்ள சின்னபரூர் கிராமத்தைச் சேர்ந்த கண்ணதாசன். 1980 - களில் பிழைப்பு தேடி மும்பைக்கு சென்ற லட்சக்கணக்கான தமிழர்களில் கண்ணதாசனும் ஒருவர். மும்பையில் ஹோட்டல் ஒன்றில் வேலை பார்த்து வந்த கண்ணதாசனுக்கு அங்கு வரும் ரவுடிகளுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
நாளைடைவில், ரவுடிகளுக்கு இவர் தோஸ்த்தாகி விட, ஹோட்டல் வேலையை விட்ட கண்ணதாசன் அவர்களுடன் கை கோத்து தாதாகிரியில் இறங்கத் தொடங்கினார். அடிதடி, கொலை, கொள்ளை, கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட பணம் கொட்டத் தொடங்கியது. அதே நேரத்தில், கண்ணதாசன் மீதும் வழக்குகள் ஏறிக் கொண்டேயிருந்தன. அப்படி, சுமார் 30 வழக்குகளில் சிக்கிய கண்ணதாசனுக்கு 1988 -ஆம் ஆண்டு மும்பை உயர்நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. மும்பை சிறையில் 10 ஆண்டுகள் கழித்த பிறகு, கைதிகளை சொந்த மாநிலத்துக்கு மாற்றும் சட்டத்தின்படி, கடலூர் மத்திய சிறைச்சாலைக்கு கண்ணதாசன் மாற்றப்பட்டார். இங்கு, 11 ஆண்டுகள் சிறையில் இருந்த நிலையில் , தியானம், யோகா ஆகியவற்றில் ஈடுபட்டு மனதில் நேர்மைறையான சிந்தனைகளை கண்ணதாசன் வளர்த்துக் கொண்டார். கண்ணதாசன் சிறையில் இருக்கும் போதே, தன் பெற்றோரையும் இழந்து தனிமரமானார். சிறைக்கு வந்து பார்க்கவும் ஆறுதல் சொல்லவும் கூட யாருமில்லாமல் போனது.
இதற்கிடையே, நன்னடத்தை காரணமாக கடலூர் சிறையில் இருந்து கண்ணதாசன் விடுதலையானார். பிறகு, சொந்த ஊரான சின்னபரூரில் அமைதியாக வாழ்ந்த கண்ணதாசனுக்கு உறவினர்கள் அவருக்கு திருமணமும் செய்து வைத்தனர். தற்போது, குடும்பத்தை காப்பாற்ற டீ விற்பனையில் ஈடுபட்டு சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். டிப்-டாப்பாக சபாரி உடை அணிந்து தலையில் தொப்பியுடன் வித்தியாசமான கெட்டப்பில் தெரு தெருவாக சென்று டீ விற்கும் கண்ணதாசனை விருத்தாசலத்திலுள்ள அத்தனை அரசு அலுவலங்களிலும் காண முடியும். கண்ணதாசனின் தாதாகிரி கதைகளையும் , வேதனை நிறைந்த சிறை வாழ்க்கை கதையையும் கேட்டுக் கொண்டே அவரிடத்தில் வாடிக்கையாளர்கள் டீ வாங்கி குடிக்கின்றனர் . வன்முறையில் ஈடுபட்டு வாழ்க்கையை இழந்து விடாதீர்கள் என்பதுதான் இளைஞர்களுக்கு கண்ணதாசன் விடுக்கும் கோரிக்கையாக உள்ளது.
Comments