'அவனுக்கெல்லாம் கல்யாணமா?' - ஊராரிடம் கேலி பேசிய தம்பியைக் கொலை செய்த அண்ணன்
திருமங்கலத்தில் தனது திருமணம் குறித்து நண்பர்களிடம் கேலி பேசிய தம்பியை அண்ணன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம், திருமங்கலம் செங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் மருதன். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரான இவருக்கு பாண்டியராஜன், சின்னதுரை, தினேஷ் ஆகிய மூன்று மகன்கள் உண்டு. தினேஷ் தன் வீட்டு மொட்டை மாடியில் உறங்குவது வழக்கம். நேற்றிரவு மொட்டை மாடிக்கு உறங்கச் சென்ற தினேஷ் காலையில் திரும்பி வரவில்லை. பெற்றோர் மாடியில் சென்று பார்த்தபோது தினேஷ் ரத்த வெள்ளத்தில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். தினேஷின் உடலை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போது, அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறி விட்டனர். இதற்கிடையே, வீட்டிலிருந்த பாண்டியராஜனும் காணாமல் போய் விட்டார்.
தகவலறிந்த போலீசார் தினேஷ் உயிரிழந்தது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு உடலை ஆய்வு செய்தனர். மருதன் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் நடத்திய விசாரணையில் மூத்த மகன் பாண்டியராஜனுக்கும் தினேஷ்கும் அடிக்கடி சண்டை நடந்ததும், பாண்டியராஜனை தினேஷ் கேலி கிண்டல் செய்ததும் தெரிய வந்தது.
பாண்டியராஜனுக்கு பெற்றோர் பெண் பார்த்து வந்துள்ளனர். சகோதரனுக்குப் பெண் பார்ப்பது குறித்து, 'அவனுக்கெல்லாம் கல்யாணம் தேவையா' என்கிற ரீதியில் தினேஷ் ஊராரிடம் கேலி பேசியதாகத் தெரிகிறது. நண்பர்கள் சிலர் இது குறித்து பாண்டியராஜன் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளனர். இது தொடர்பாகக் கடந்த மூன்று நாள்களாக பாண்டியரஜனும் தினேஷூம் சண்டை போட்டு வந்துள்ளனர்.
இந்த நிலையில், தம்பி மீது தீராத ஆத்திரத்தில் இருந்த பாண்டியராஜன், நேற்றிரவு தினேஷ் மொட்டை மாடியில் உறங்கிக் கொண்டிருந்த போது பயங்கர ஆயுதங்களால் தாக்கி அவரைக் கொலை செய்துவிட்டுத் தப்பி ஓடியுள்ளார். தற்போது, வழக்குப்பதிவு செய்த திருமங்கலம் காவல்துறையினர் அவரைத் தேடி வருகின்றனர்.
அன்பையும் பாசத்தையும் காட்ட வேண்டிய அண்ணன் தம்பிகள் இப்படி, வெட்டிக் கொள்ள, தலைமையாசிரியர் மருதன் குடும்பம் மட்டுமல்லாமல் அந்த பகுதி மக்களே கடும் வேதனையில் உள்ளனர்...
Comments