மருத்துவ படிப்பில் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு விவகாரத்தில் விரைவில் நல்ல முடிவை அறிவிப்பதாக ஆளுநர் உறுதி என அமைச்சர்கள் தகவல்
மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் விரைவில் நல்ல முடிவு எடுப்பதாக ஆளுநர் உறுதியளித்துள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
மருத்துவப்படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க வலியுறுத்தும் விதமாக, ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை அமைச்சர்கள் சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன், செங்கோட்டையன், ஜெயக்குமார், விஜயபாஸ்கர் மற்றும் தலைமைச் செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் சந்தித்து பேசினர்.
சுமார் ஒன்றரை மணி நேரம் நடந்த இந்த சந்திப்பு குறித்து அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் விளக்கினார்.
அப்போது, முதலமைச்சரின் ஒப்புதலோடு ஆளுநரை சந்தித்ததாக அமைச்சர் குறிப்பிட்டார். அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டத்துக்கு ஒப்புதல் அளித்தால் மட்டுமே எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு நடத்த முடியும் என ஆளுநரிடம் சுட்டிக்காட்டியதாகவும் அவர் கூறினார்.
பரிசீலித்து ஒப்புதல் வழங்குவதற்கு ஆளுநருக்கு அவகாசம் தேவை என்பதால் அவரை கட்டாயப்படுத்த முடியாது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்தார்.
ஆளுநரை சந்தித்த அமைச்சர்கள் 5 பேரும், பின்னர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்தனர். ஆளுநருடன் நடத்திய ஆலோசனைகள் குறித்து அவர்கள் முதலமைச்சரிடம் எடுத்துரைத்தனர்.
Comments