வாரிசு சான்றிதழ் வழங்க லஞ்சம்! - காட்டிக்கொடுத்த பாட்டியால் சிக்கிய கிராம நிர்வாக அதிகாரி
வாரிசு சான்றிதழ் வழங்கக் கிராம நிர்வாக அதிகாரி வஞ்சம் கேட்டதால், பெண் ஒருவர் தன் பேத்திகளுடன் அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகத்திலேயே பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகேயுள்ள ஆலாம்பாளையத்தை சேர்ந்தவர் ஜோதிமணி(63). இவரது மகன் செல்வக்குமார். மனைவி பிரியா உடல் நலக்குறைவு காரணமாக இறந்து விட்டார். இவர்களுக்கு, கனிகா, யோகஸ்ரீ என்ற பெயரில் இரு மகள்கள் உண்டு. இந்த நிலையில், மருமகள் பிரியா இறந்து போனதால், சொத்துகளைப் பேத்திகள் பெயருக்கு மாற்றக் கோரி கூலி ஜோதிமணி மாத்தூர் கிராம நிர்வாக அலுவலரிடம் வாரிசு சான்றிதழ் வேண்டி விண்ணப்பித்தார். மாத்தூர் கிராம நிர்வாக அதிகாரியான சந்தோஷ் 3,000 லஞ்சம் கேட்டதாகச் சொல்லப்படுகிறது. கொரோனா காலத்திலும் லஞ்சம் கொடுத்தால் மட்டுமே சான்றிதழ் கொடுப்பேன் என்று சந்தோஷ் ஜோதிமணியிடம் கூறியதாகத் தெரிகிறது.
இதையடுத்து பாதிக்கப்பட்ட ஜோதிமணி குடும்பத்தினருடன் நேற்று மதியம் அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகம் வந்தார். பின்பு, பொதுமக்களிடம் கிராம நிர்வாக அதிகாரிக்கு வாரிசு சான்றிதழ் வாங்க லஞ்சம் கொடுக்க தன்னிடம் பணம் இல்லை. இதனால் பிச்சை எடுப்பதாகக் கூறி, பதாகை ஏந்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால், வட்டாட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. வட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்த பொதுமக்களும் ஜோதிமணிக்கு பிச்சையளித்து ஆதரவு தெரிவித்தனர். பிறகு, கிராம நிர்வாக அலுவலர் சந்தோஷ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வட்டாட்சியரிடம் ஜோதிமணி மனு அளித்தார். இது தொடர்பாக, நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், போராட்டத்தில் ஈடுபடப் போவதாக சமூக ஆர்வலர்கள் அறிவித்துள்ளனர்.
Comments